Friday, January 20, 2012

"நான் கற்பிப்பதெல்லாம் துக்கத்தைப் பற்றியும் அதைத் தடுப்பதைப் பற்றியும் தான்."

கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு

கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு
 
   உலகத்திலே அறம் குன்றி மறம் வளர்ந்து மக்கள் அல்லலுறுங் காலங்களிலெல்லாம் புத்தர்கள் தோன்றி அறவழியைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள் என்பதும், பற்பல கற்பகாலங்களில் கணக்கற்ற புத்தர்கள் தோன்றி அறநெறியை நாட்டிச் சென்றார்கள் என்பதும், இப்போது நடைபெறுகிற இந்தக் கற்பகாலத்திலே இருபத்தைந்து புத்தர்கள் தோன்றினார்கள் என்பதும் அவர்களுள் கடைசியாக வந்தவர் கௌதமபுத்தர் என்பதும் பௌத்தசமயக் கொள்கைகள். இனி வரப்போகிற புத்தரது பெயர் மயித்ரேய புத்தர் என்பதும், அவர் இப்போது துடிதலோகம் என்னும் தெய்வலோகத்திலே நாததேவர் என்னும் பெயருடன் இருக்கிறார் என்பதும் அந்த மதக் கொள்கைகளாம்.

  பல புத்தர்கள் இருந்தார்கள் என்று பௌத்த சமய நூல்கள் கூறினாலும் சரித்திர நூலோர், கௌதமபுத்தரை மட்டும் சரித்திரகாலப் புத்தர் என்று கொள்கிறார்கள். கௌதமபுத்தருடைய வரலாறு தனி நூல்களாக எழுதப்பட்டுள்ளன வாகையினாலே, ஈண்டு அவரது வரலாற்றை மிகச் சுருக்கமாகக் கூறுகிறோம்.

  சாக்கிய குலத்திலே கௌதம குடும்பத்தைச் சேர்ந்த சுத்தோதனர் என்னும் அரசர் கபிலவத்து என்னும் ஊரை அரசாண்டு வந்தார். கபிலவத்து இமயமலை அடிவாரத்திலே இப்போதைய நேபாள நாட்டில் இருந்தது. சுத்தோதன அரசருக்கும் அவர் மனைவியராகிய மாயாதேவிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலே, அஃதாவது ஏறக்குறைய கி.மு 563இல் இந்தக் குழந்தை பிறந்ததாகச் சரித்திர நூலோர் கூறுவர். இக் குழவிக்குச் சித்தார்த்தர் என்று பெயர் சூட்டினார்கள். இக் குழந்தைதான் பிற்காலத்திலே புத்தர் பெருமானாக விளங்கியது.

  சித்தார்த்தர் பெரியவனானால் துறவியாய் விடுவார் என்று நிமித்திகர் கூறியதைக் கேட்டு, அரசன் மனம் வருந்தி, அக்குழந்தைக்குத் துறவு பூணும் எண்ணம் தோன்றாமலிருக்கும் பொருட்டு அதனைச் செல்வத்திலும் சுகபோகங்களிலும் திளைத்துவரச் செய்தார். உலக வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றாதபடி இன்ப சுகங்களைக் கொடுத்துவந்தார். குழந்தை வளர்ந்து பதினாறு வயதுள்ள குமாரனானபோது அவருக்கு விருப்பமுள்ள ஓர் அரசிளங்குமரியை மணம் செய்து வைத்தார். சித்தார்த்த குமாரனுடைய இருபத்தொன்பதாவது ஆண்டிலே அவருக்கு இராகுலன் என்னும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அன்றைக்கே, சித்தார்த்தர் துறவு கொள்வதற்குக் காரணமான நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.

  வயது முதிர்ந்த "தொண்டு" கிழவர், கடும்பிணியினால் வருந்தும் நோயாளிகள், இறந்துபட்ட உடலாகிய பிணம் முதலிய துன்பக் காட்சிகளைச் சித்தார்த்தர் காண்பதற்கு வாய்ப்பில்லாதபடி அவரின் தந்தையார் ஏற்பாடு செய்திருந்தும், இக் காட்சிகளை யெல்லாம் அவர் காணும்படி நேரிட்டது. மிகவும் வயது முதிர்ந்த தள்ளாத கிழவர் ஒருவரை அவர் கண்டார். பிறகு, கொடிய நோயினால் வருந்தி வாய்விட்டலறிய ஒரு நோயாளியையும், உயிர் நீங்கிப் பிணமாகக் கிடந்த ஒரு மனித உடலினையும் அவர் காண நேரிட்டது. பின்னர், துறவி ஒருவரைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. துறவற வாழ்க்கை கவலையற்ற இன்ப வாழ்க்கை என்று அவர் கண்டார். மேலே கூறிய காட்சிகளை எல்லாம் காணப் பெற்ற சித்தார்த்தருக்கு, மனித வாழ்க்கை துன்பத்தில் சூழப்பட்டது என்றும், துன்ப வாழ்க்கையிலிருந்து நீங்கி நிலைத்த இன்பநெறியைக் கண்டு பிடித்து உலகத்தாரை உய்விக்க வேண்டும் என்றும் பேரவா உண்டாயிற்று. ஆகவே, அவர், அன்று நள்ளிரவிலே தம் ஒரே மகனையும், மனைவியையும், தாய் தந்தையரையும், இன்ப சுகங்களையும், அரச உரிமையையும், செல்வங்களையும், சுக போகங்களையும் துறந்து காட்டிற்குச் சென்றார்.

  முதலில் ஆளார காலாமர் என்பவர் இடத்திலும், பிறகு, உத்தக ராமபுத்திரர் என்பவர் இடத்திலும் சீடராக அமர்ந்து அவர்கள் காட்டிய வழியில் ஒழுகினார். விரைவிலே, அவர்கள் காட்டிய நெறி மக்களை உய்விக்கும் நெறியன்றென்று கண்டு, அவர்களை விட்டு உருவேல் என்னும் இடத்திற் சென்று, உண்ணாவிரதம் பூண்டு கடுந்தபசு செய்தார். அப்போது ஐந்து துறவிகள் இவரையடுத்து இவருடன் இருந்தார்கள். உணவு கொள்ளாமல் உடலை வாட்டி ஒடுக்கிக் கடுந்தபசு செய்தமையினாலே, குருதியும் தசையும் வற்றி எலும்பும் நரம்பும் தெரியும்படி உடல் நலிந்து வலிவு இல்லாமல் மயங்கி விழுந்தார். அதன்பிறகு, அளவுக்கு மிஞ்சி உடம்பைப் பட்டினியால் வாட்டுவது தவறு என்றும், அது மெய்ஞானம் பெற வழியன்றென்றும் கண்டு அன்று முதல் சிறிதளவு உணவு கொள்ளத் துணிந்தார். இதனைக்கண்ட இவருடன் இருந்த பிக்குகள் இவரைவிட்டுப் போய்விட்டார்கள். கடைசியாகப் போதி (அரச) மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்த போது மெய்ஞ்ஞான ஒளியைக் காணப் பெற்றார். மெய்ஞ்ஞான ஒளியைக் கண்ட சித்தார்த்தர் புத்தர் ஆனார். ஞானமாகிய போதி கைவரப்பெற்று, பிறவித் துன்பத்தைக் கடந்து பிறவாமையாகிய இன்பநெறியைக் கண்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்தைந்து.

  பிறகு, புத்தர் தம்மை விட்டுச் சென்ற ஐந்து பிக்குகளைத் தேடிச்சென்று அவர்களுக்குத் தாம் கண்ட உண்மைகளைப் போதித்தார். அவர்கள் இவர்தம் உபதேசங்களைக் கேட்டு இவருக்குச் சீடர் ஆனார்கள். பிறகு, பல துறவிகள் இவருக்குச் சீடர் ஆயினர். அறுபதுபேர் சீடரானவுடன் அவர்களை ஊரெங்கும் அனுப்பித் தமது பௌத்தமதத்தைப் போதிக்கச் செய்தார். தாமும் பல இடங்களுக்குச் சென்று போதித்தார். இவரது புதிய உபதேசத்தைக் கேட்டு, வேறு மதத் துறவிகளும் கூட்டங் கூட்டமாகப் பௌத்தமதத்தில் சேர்ந்தார்கள். துறவிகள் மட்டும் அன்று; இல்லறத்தாராகிய அரசர்களும், நிலக்கிழார்களும், வணிகரும், செல்வந்தரும், பாமரமக்களும் பௌத்தமதத்தை மேற்கொண்டார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகள் நாடெங்கும் சுற்றித் திரிந்து புத்தர் தமது கொள்கையைப் போதித்தார்.

  துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் ஒழுக வேண்டிய முறைகளை வகுத்தார். பிக்கு சங்கத்தை ஏற்படுத்தினார்.

  அரசர்களும், பிரபுக்களும் பிக்குகள் தங்குவதற்கு விகாரைகளையும் பள்ளிகளையும் அமைத்துக் கொடுத்து நிலபுலங்களைத் தானம் வழங்கினார்கள்.

  இவரது முதுமைக் காலத்தில் இவருக்கு மாறாகச் சிலர் கிளம்பி இவர் உண்டாக்கிய பௌத்த மதத்தில் பிளவு உண்டாக்க முயன்றனர். ஆனால், இவர் பிளவு ஏற்படாதபடி செய்தார்.

  புத்தர் பெருமான் தமது எண்பதாவது ஆண்டில் கி.மு 483 இல் ருசி நகரத்தில் நிர்வாண மோட்சம் அடைந்தார். ருசி நகரத்தார் இவர் உடலுக்கு இறுதிக் கடமைகளைச் செய்தார்கள். கொளுத்தப்பட்டு எஞ்சிய உடம்பின் சாம்பலும் எலும்பும் எட்டுப் பகுதியாகப் பகுக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு அவற்றின்மேல் சைத்தியாலயங்கள் கட்டப் பட்டன.

  புத்தருக்கு ஆயிரக்கனக்கான சீடர்கள் இருந்தார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சாரிபுத்திரர், மொக்கலானார் (மௌத்தல்யானர்), மகாகாசிபர், உபாலி, ஆநந்தர், அனுருத்தர், காத்யானார் முதலானவர். மகத நாட்டரசர் பிம்பசாரரும், கோசல நாட்டரசர் பசேனதி (பிரசேனஜித்) என்பவரும் இவருடைய சீடர்களாயிருந்து இவரது மதம் பரவுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்கள்.
  புத்தர்பெருமான் உயிர் வாழ்ந்திருந்த காலத்திலே பல மதங்கள் இருந்தன. சைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மாகாவீரர் (நிகந்தநாதபுத்த) என்பவர் இவர் காலத்தில் இருந்த சைனமதத் தலைவர். மகாவீரர், வயதினால் புத்தருக்கு மூத்தவர். சைனமதத் துறவிகள் உடலை வாட்டி ஒடுக்கி உண்ணாவிரதமிருந்து கடுநோன்பு நோற்று வந்தனர். கோசாலி மக்கலி என்பவர் உண்டாக்கிய ஆசீவகமதமும் புத்தர்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலி (மக்கலி) யும் புத்தர்காலத்திலே உயிர் வாழ்ந்திருந்தவர். (ஆசீவகமதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) ஆசீவகமதத் துறவிகளும், நிகண்ட (சைன) மதத் துறவிகளும் உடையின்றி அம்மணமாகத் திரிந்தார்கள். அக்காலத்தில் இருந்த இன்னொரு முக்கியமான மதம் பிராமண மதம் எனப்படும் வைதீக மதமாகும். பிராமணர்கள் ஆடு மாடு குதிரை முதலிய மிருகங்களைக் கொன்று கொலை வேள்வி செய்து வந்ததோடு சாதிப்பிரிவையும் வளர்த்து வந்தார்கள். இன்னும் சில மதங்கள் அக்காலத்தில் இருந்தனவாயினும், குறிப்பிடத்தக்கவை சைனம், ஆசீவகம், வைதீகம் என்னும் மூன்று மதங்களாம். இந்த மூன்று மதங்களும் பௌத்தமதத்தோடு ஆதிமுதல் போரிட்டுக் கொண்டிருந்தன.

பௌத்தம் - ஒரு ஆரம்ப வழிகாட்டி

                            பௌத்தம் - ஒரு ஆரம்ப வழிகாட்டி

"அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், பழக்க வழக்கங்களையும், வதந்திகளையும், வேதாகம நூட்களையும், உணர்ந்த முடிவினையும், நிறுவப்பட்ட கோட்பாட்டினையும், திறமையான வாதத்தினையும், விசேட சித்தாந்தத்தினையும் நம்பி இருக்காதீர்கள். மற்றவர் சிறந்த அறிவாளி என்பதனாலோ, ஆசிரியரின் மேல் உள்ள நன்மதிப்பின் காரணமாகவோ அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.... உங்களுக்கு எது தவறானது, எது முட்டாள்தனமானது, எது தகுதியற்றது, எது சேதம் விளைவிக்கும், எது அதிருப்தி தரும் என்று தெரிந்த பிறகு அதை விட்டு விடுங்கள். உங்களுக்கே எது சரியானது என்று தெரிந்த பிறகு அதை வளர விடுங்கள்...... "
பலவிதமான சமய வழக்கங்கள் பௌத்த மதத்தோடு இணைக்கப் பட்டுள்ளன. ஆனால் இவை எல்லாம் 'சித்தாத்த கோதமா' என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் வாழ்ந்த ஞானியின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவர் தான் பிற்காலத்தில் 'புத்தர்' - அதாவது 'விழிப்பு அடைந்தவர்' என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் தன் சுய முயற்சியாலேயே ஞானம் பெற்றார். புத்தர் எதையும் எழுதி வைக்கவில்லை. ஆனால் அவர் கற்பித்த போற்றத்தக்க வாய்மை (தர்மம்) அவர் காண்பித்த சமய வழியைப் பின்பற்றிய சீடர்களால் (சங்கம் என்று அழைக்கப்படுவர்) வாய்மொழிச் சொல்லாகப் பரவி உலகில் நிலை பெற்றது. அவர் தம் வாழ்நாளில் 45 ஆண்டுகள் சங்கத்திற்கு வழி காட்டியாக விளங்கினார்.

இச்சங்கம் பல நூற்றாண்டுகளாக அழியாது தொடர்ந்து புத்தரின் ஞானத்தைத் தங்கள் வாழ்க்கை நடைமுறையினாலும் வாய்ச் சொல்லாலும் பாதுகாத்து வருகிறது. இது நாள் வரை புத்தர், தர்மம், சங்கம் ஆகிய மூன்றும் எல்லாப் பௌத்த மதத்தினராலும் 'மூன்று புகலிடங்கள்' என்றும், 'மூன்று இரத்தினக் கற்கல்' என்றும் மதித்துப் பாராட்டப் படுகின்றன. மேலும் புத்தர், தர்மம், சங்கம் ஆகிய மூன்றும் அறிவுடைமை, வாய்மை, நற்பண்பு ஆகிய மூன்றுக்கும் அடையாளக் குறிகளாக விளங்குகின்றன. இந்த மூன்று குணங்களை நாமே நம்முள் வளர்த்துக்கொள்ள முடியும்.

புத்தர் காலத்திற்குப் பிறகு அவர் கற்றுக்கொடுத்த தர்மம் ஆசியாக் கண்டம் முழுமையும் அதற்கு மேலும் பரவியது. அதன் விளைவாக அந்தந்த நாடுகளின் கலாச்சாரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தினால் அது பல மாறுபாடுகளை அடைந்தது. அதன் விளைவாகப் பௌத்த மதத்திற்குள்ளே பல உட்பிரிவுகள் தோன்றின. அவற்றுள் முக்கியமான மூன்று பிரிவுகளாவன : 1, தேராவாதா (பெரியோர் வாதம்) என்று அழைக்கப்படும் பிரிவு இலங்கை, தாய்லாந்து, பர்மா நாடுகளில் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. 2. மஹாயானா (பெரிய வாகனம்) என்று அழைக்கப்படும் பிரிவு சீனா, கொரியா, ஜப்பான் நாடுகளில் காணப்படுகின்ற பழக்க வழக்கங்களைத் தழுவியது. 3. வஜ்ரயானா (வைரக்கல் வாகனம்) என்று அழைக்கப்படும் பிரிவு திபெத் பகுதியில் காணப்படுகிறது. கீழ்க் காண்பவை தேராவாதா பிரிவினை மேற்கோள் காட்டி எழுதப் பட்டுள்ளன.

                                            புத்தர் காட்டிய பாதை

புத்தர் ஆன்மீக விழிப்புக்கான ஒரு பாதையைக் கற்றுக்கொடுத்ததோடு நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தவேண்டிய ஒரு 'கோட்பாட்டையும்' காண்பித்தார். இந்தக் கோட்பாட்டுக்கான பாதையை, ஒன்றுக்கொன்று துணை நிற்கும் மூன்று அம்சங்களாகப் பிரிக்கலாம் - அவை நற்பண்பு, தியானம் மற்றும் அறிவுடைமை.

"நேர்மை இருக்கும் இடத்தில், அறிவுடைமை உள்ளது,
அறிவுடைமை இருக்கும் இடத்தில் நேர்மை உள்ளது.
நேர்மையானவர்களிடம் அறிவுடைமை உள்ளது,
அறிஞர்களிடம் நேர்மை உள்ளது.
அறிவுடைமையும் நேர்மையும் உலகில் சிறந்தவைகளாகக் கூறப்படுகின்றன."

நற்பண்பு
புத்தரின் கோட்பாட்டுக்கான பாதையில் செல்ல விரும்புவோர், சம்பிரதாயப்படி உறுதி மொழி எடுக்கலாம். மூன்று புகலிடங்கள் மற்றும் ஐந்து நல்லொழுக்க உபதேசங்களைப் பௌத்த விகாரங்களுக்குச் (துறவிகள் வசிக்கும் ஆசிரமம்) சென்று ஆண் அல்லது பெண் துறவியிடம் உபதேசம் பெற்றுக் கொள்ளலாம். அல்லது நீங்களே உங்கள் வீட்டிலேயே உறுதி மொழி எடுத்துக் கொள்ளலாம். மூன்று புகலிடங்களை ஏற்றுக்கொண்டால் நம் வாழ்க்கையை அறிவுடைமை, வாய்மை மற்றும் நற்பண்பு ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இணங்கப் புத்தர் கற்றுக்கொடுத்தப்படி, புத்தரை முன்னுதாரணமாக வைத்து நடந்து கொள்ள வேண்டும். ஐந்து நல்லொழுக்க உபதேசங்கள் என்பன நம் தினசரி வாழ்வில் கடைபிடிக்க உதவும் பயிற்சி விதிகளாகும்:

எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல்
கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல்
தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல்
தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்; (பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் தவிர்த்தல்)
போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல்

மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையில் வாழும் ஒருவருக்குத் தன்னடக்கமும் தியானஞ் செய்யக் கவனமாகப் பேணிவளர்க்க வேண்டிய நுண்ணிய உணர்வும் வளர்கிறது.  தியானம் தான் புத்தர் காட்டிய பாதையின் இரண்டாவது அம்சம்.
தியானம
பொதுவாக, பேச்சு வழக்கில் கூறப்படும் தியானம் என்பது மனப் பார்வையை ஒரு உருவதின்மேலோ, வார்த்தையின்மேலோ, தலைப்பின் மேலோ திரும்பத் திரும்பக் கவனம் செலுத்தி, மனதை அமைதிப்படுத்தி, அந்த உருவத்தின் அல்லது வார்த்தையின் பொருளைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பது தான். பௌத்த ஆழ்ந்த அறிவு தியான (விபாஸனா என்று அழைக்கப்படும்) வழியில் இதற்கு மற்றொரு நோக்கமும் உள்ளது – அது மனதின் இயல்பான குணத்தை மேலும் புரிந்துக்கொள்வதுதான். தியானப் பொருளை ஒரு அசையாத குறியாக வைத்தால், மனதின் வெளித்தோற்றத்தில் நடைபெரும் செயல்களால் புதைக்கப் பட்டுள்ள அடிமனப்போக்கைத் தெளிவு படுத்த உதவும். புத்தர் தனது சீடர்களைத் தங்கள் உடம்பையும், மனத்தையும் தியானப் பொருளாகப் பயன்படுத்த ஊக்கமளித்தார். உதாரணத்திற்கு, சாதாரணமாக மூச்செடுக்கும் போது உருவாகும் உணர்ச்சிகள் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு தியானப் பொருள். அசையாது உட்கார்ந்து, கண்களை மூடி, மூச்சின் மேல் கவனம் செலுத்தினால் ஒரு காலக் கட்டத்தில் தெளிவும் அமைதியும் தோன்றும். இந்த மனநிலையில், கொந்தளிக்கும் மன நிலமைகள், எதிர் பார்ப்புகள், அடிக்கடி நிகழ்கிற மனோபாவங்கள் எல்லாம் தெளிவு பெற்று, அமைதியான ஆனால் தெளிவான விசாரணையினால் விடுபட்டு விடுகின்றன.

தியான நிலையை ஓர் இடத்தில் அசையாது உட்கார்ந்து மட்டும் அல்லாமல், அன்றாடச் செயல்களைச் செய்யும் போதும் அடையலாம் என்று புத்தர் கற்றுத் தந்தார். கவனத்தை உடலின் அசைவுகளின் மேலும், ஏற்பபடும் உடல் உணர்ச்சிகளின் மேலும், மனதில் தோன்றும் மனோநிலைகள் மற்றும் எண்ணங்கள் மீதும் செலுத்தலாம். இந்த நடமாடும் கவனம் 'விழிப்புடன் இருத்தல்' என்று சொல்லப்படும்
விழிப்புடன் இருப்பதால் சாந்தமான ஒரு கவனத்தை அறிந்துக் கொள்கிறோம் என்று புத்தர் தெளிவுபடுத்தினார். உடலையும் மனதையும் மையமாக வைத்திருந்தாலும் இந்தக் கவனமானது எந்த ஒரு உடல் அல்லது மன அனுபவத்தோடும் பட்சபாதமில்லாமலும் கட்டுப் படாமலும் இருக்கிறது. இந்த விலகின மனநிலையானது பௌத்தர்களால் நிர்வாணா (பாலி மொழியில் நிப்பாணா) - அமைதியும் மகிழ்ச்சியும் கலந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்படாத மன நிலை - என்று கூறப்படுகிற மனநிலைக்கு ஒரு முன்னோடி. நிர்வாணா என்பது ஒரு இயற்கையான நிலை. நம் இயற்கையான நிலையோடு சேர வேண்டிய ஒன்று இல்லை. மன அழுத்தங்களும் குழம்பிய பழக்கங்களும் இல்லாத போது நம் மன நிலை அப்படித்தான் இருக்கும்..உறக்கத்திலிருந்து விழிக்கும் போது எப்படிக் கனவு நிலை மறைகிறதோ, அதேபோல விழிப்புடன் இருப்பதால் தெளிவடையும் மனமானது ஆட்டிப் படைக்கும் எண்ணங்களாலும், சந்தேகங்களாலும், கவலைகளாலும் பாதிகப்படுவதில்லை.

விழிப்புடன் இருத்தல் நாம் பயன்படுத்தும் அடிப்படையான கருவி என்றாலும், நம்மைப் பற்றிச் சரியான கருத்தினை நிறுவவும் விழிப்புடன் இருத்தலால் தெளிவாவதை மதிப்பீடு செய்யவும் பொதுவாகச் சில யோசனைக் குறிப்புகள் தேவைப்படுகிறது. இந்த குறிப்புகள்தான் புத்தரின் நுண்ணறிவுப் போதனைகளினால் கிடைக்கின்றன.

நுண்ணறிவு

பொதுவாக பயன்படுத்தப்படும் புத்தரின் நுண்ணறிவுப் போதனைகள் கடவுளைப் பற்றிய அல்லது அடிப்படையான உண்மையைப் பற்றிய அறிக்கைகள் அல்ல. அப்படிப்பட்ட அறிக்கைகளாக இருந்தால் அது கருத்து வேறுபாடுகளுக்கும், முரண்பட்ட பேச்சு வார்த்தைக்கும், வன்செயலுக்கும் கூட இடம் கொடுக்கும் என்று புத்தர் கருதினார். அதற்கு மாறாகப் பௌத்த நுண்ணறிவு நம்பிக்கை என்று ஒன்றை ஏற்றுக் கொள்ளாமல் நம் வாழ்க்கையைப் பற்றி நாமே என்ன கவனிக்கிறோமோ அதை விளக்குகிறது. பௌத்தப் போதனைகள் நமது அனுபவங்களோடு பரிசோதனை செய்து பார்க்கப்பட வேண்டும். பல்வேறு மக்கள் வாய்மையைப் பலவிதமாக வெளிப்படுத்துவார்கள்; நாம் எதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றால் நம் அனுபவங்கள் எவ்வளவு நியாய பூர்வமானவையாக இருக்கின்றன என்பதும், அவை நமக்கு மேலும் அறிவூட்டவும் கருணையோடு வாழ்வை நடத்தவும் வழி வகுக்கிறதா என்பது தான். போதனைகள் மனக்கசப்பு நீங்க வழிவகுக்கும் கருவிகளாக விளங்குகின்றன. மனம் தெளிவான பிறகு அடிப்படையான உண்மை - அதை எவ்விதத்தில் வெளிப்படுத்தினாலும் சரி- வெளிப்படையாகிறது.
நான்கு மேன்மையான உண்மைகள்
பொதுவாக நாம் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொண்டிருப்பது முழுமையற்றது என்று மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகப் புத்தர் துக்கத்தைப் பற்றி விளக்குகிறார். துக்கம் என்ற வார்த்தை அதிருப்தி அல்லது திருப்தி அளிக்காத என்று பொருள் சொல்லப் படுகிறது. புத்தர் தனது போதனைகளைத் துக்கத்தைப் பற்றிய உண்மை, அதன் தொடக்கம், அதன் முடிவு மற்றும் அதன் முடிவுக்கான வழி என்று சுருக்கமாக கூறுகிறார். இந்த அடிப்படைப் போதனைகள், ஒருவருடைய அனுபவங்களோடு ஒத்துப் போகிற வழிகாட்டியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இப்போதனைகளே நான்கு மேன்மையான உண்மைகளென அறியப் படுகின்றன.

முதல் மேன்மையான உண்மை: துக்கம் இருக்கிறது
வாழ்க்கையில் நோய், தொல்லை, இடையூறு போன்ற நமக்குப் பிடிக்காத அனுபவங்கள் ஓர் அளவுக்கு இருந்தாக வேண்டும். வசதியான சமுதாயங்களிலும் மக்கள் வேதனை, மனக் கவலை, குறிக்கோளற்றிருப்பது அல்லது வாழ்வின் சவால்களைச் சமாளிக்க முடியுமா என்று சந்தேகிப்பது போன்ற துன்பகளை அனுபவிக்கிறார்கள். மேலும், பிடித்த அனுபவங்கள் குறைவாகவே உள்ளன அல்லது நிலையற்று இருக்கின்றன. நாம் அன்பு செலுத்தும் ஒருவர் இறந்தாலோ அல்லது நம் நண்பர் நம்மை ஏமாற்றி விட்டாலோ துக்கம் தோன்றுகிறது. மேலும் தெளிவாவது என்னவென்றால் இந்தத் துக்கத்தால் எழும் மனதுக்குப் பிடிக்காத உணர்ச்சிகளை மறக்க, இன்பம் தேடிப் போவது, அதிக வெற்றி காண்பது, புதிய உறவு தேடுவது போன்ற பொதுவாக நாம் எடுக்கும் நடவடிக்கைகள் வெகு நேரம் உதவிகரமாக இருப்பதில்லை. ஏனென்றால், துக்கம் நம் ஆன்மீகத் தேவையிலிருந்து வளர்கிறது. துக்கத்தை அறிவு உணரும் ஆற்றல், சமாதானம், அமைதி போன்றவைக்கான நம் நெஞ்சின் ஏக்கம் என்று சொல்லலாம். இது ஒரு ஆன்மீக ஏக்கம் என்பதால் நாம் எவ்வளவுதான் இன்பச் செயல்கள் செய்து துக்க உணர்ச்சிகளைக் குறைக்க முற்பட்டாலும் அது வெற்றி அடைவதில்லை. நிலையற்றதன் மேலும் பலவீனமானதன் மேலும் நாம் நம்பிக்கை வைத்து நம் தேவைகளைத் திருப்தி செய்ய முயற்சிக்கும் வரை நாம் எப்போதும் ஏமாற்றம் அடைந்து எதையோ இழந்து போனது போலத் துன்பத்துக்கு ஆளாகிறோம். நம் உடலும் மனதும் எவ்வளவு பலவீனமான தென்று நாம் உணர அதிகம் சிந்தனை செய்ய வேண்டியதில்லை
"பிடிக்காத ஒன்றுடன் தொடர்பு வைத்திருப்பது துக்கம், பிடித்த ஒன்றை விட்டு விலகி இருப்பது துக்கம், வேண்டியது கிடைக்காமலிருப்பது துக்கம், சுருக்கமாகச் சொன்னால், உடல் மற்றும் மனதின் கட்டுப்படுத்த முடியாத பழக்க வழக்கங்கள் எல்லாம் துக்கம்."

இரண்டாம் மேன்மையான உண்மை: துக்கத்திற்கு ஆரம்பம் இருக்கிறது

புத்தரின் அனுபவத்தில் இந்தத் தவறான உள்நோக்கமே துக்கத்தின் காரணம். இது எப்படி? எப்போதுமே நிலையற்றதன் மீது திருப்தி அடைய முயற்சித்து, கவனமில்லாமலும் ஆன்மீக நோக்குடன் இணையாமலும் இருந்தோமானால் வாழ்க்கை நமக்குத் தரக்கூடிய செல்வங்களை தவற விட்டுவிடுகிறோம். ஆன்மிகத்திற்கான உள்ளார்ந்த சக்தியைப் பயன் படுத்தாமல் ( நம் அறியாமையினால்), நாம் உணர்ச்சிகளையும் மனோபாவங்களையும் நம்பி இருக்கிறோம்.
எனினும், மன விழிப்புடன் இருக்கும் போது இது ஒரு பழக்கம் தான் என்றும் நமது இயல்பான நிலை அல்ல என்றும் தெரிந்த பிறகு, இதை மாற்றிக் கொள்ளமுடியும் என்று உணர்ந்து கொள்கிறோம்.

மூன்றாம் மேன்மையான உண்மை: துக்கத்தைத் தடுக்கலாம்
இரண்டாம் மேன்மையான உண்மையைப் புரிந்துக்கொண்டால், உணர்ந்தும் உணராமலும் இருக்கும் நமது ( நம்மை மையமாக வைத்திருக்கும்) பழக்கவழக்கங்களை நம்மால் கைவிடக் கூடுமானால் மூன்றாவது உண்மை தானாகவே விளங்கும். பாதுகாப்பாக (மற்றவர் சொல்வதற்குப் பயந்து பயந்து) இருக்காமல், சண்டையும் ஆரம்பிக்காமல், தவறான எண்ணங்களை விட்டு, உறுதியான (மாற்றிக்கொள்ளவே முடியாத) கருத்துக்கள் இல்லாமல் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டால் மனம் ஆழ்ந்த அமைதியில் இருக்கும். வாழ்வை விரோதமாகவும் போதாக்குறையாகவும் காண்பிக்கும் பழக்க வழக்கங்களும் கருத்துக்களும் தடுக்கப்படுகின்றன
நான்காவது மேன்மையான உண்மை: துக்கத்தைத் தடுக்க ஓர் வழி இருக்கிறது
நாம் வாழும் வாழ்க்கை மீது ஆன்மீகக் கவனம் செலுத்த நடைமுறைக்கு உகந்த வழிமுறைகள் இதில் அடங்கியுள்ளன.
ஆன்மீக இயல்பைப் பேணிவளர்க்க முடிந்தால் தான் நம்மால் 'கைவிட' முடியும். அப்படி வளர்ப்ப்போமேயானால் மனம் தானாகவே நிர்வாணாவை நோக்கிச் செல்லும். வழி இருக்கிறது என்றும் வழியை நிறைவேற்ற முறை இருக்கிறது என்றும் தெரிந்துக்கொள்ளக்கூடிய நுண்ணறிவு மட்டும் இருந்தால் போதும்.
'வழி' என்பது மேன்மையான எட்டுப் பிரிவுப் பாதை. இதை அடிக்கடி பௌத்த மதச் சின்னங் களில் சக்கரமாகக் காண்பிக்கப்படும். சக்கரத்தின் ஆரைகள் எப்படி ஒன்றையொன்று தாங்கி நிற்கிறதோ அதே போல, எட்டுப் பிரிவுப் பாதையில் ஒவ்வொரு பாகமும் மற்ற பாகங்களைத் தாங்கி நிற்கும். புத்தர் வழியில் நாம் செல்வோமேயானால் கீழ்க் காணும் எட்டுப் பாகங்களையும் நாம் ஒருசேர வளர்க்க வேண்டும். அவை: சிறந்த கருத்து, சிறந்த நோக்கம், சிறந்த பேச்சு, சிறந்த நடத்தை, சிறந்த தொழில் வகித்தல், சிறந்த முயற்சி, சிறந்த 'விழிப்புடன் இருத்தல்', சிறந்த ஒருமுகச் சிந்தனை.
இங்கே 'சிறந்த' என்ற வார்த்தியைச் சேர்ப்பதற்குக் காரணம் நம்மையே மையமாக வைத்து வாழாமல், நற்பண்பு, தியானம் மற்றும் நுண்ணறிவுடன் வாழ அவசியம் இருப்பதால் தான். அப்படிப்பட்ட வழி எல்லோருக்கும் சிறந்தது, நமக்கும் உகந்தது.

பாதையைப் பின்பற்ற

எதனால் அவர் சீடர்கள் எப்போதும் உற்சாகமாக இருக்கிறார்கள் என்று கேட்டதற்குப் புத்தர் விளக்கினார்:
"அவர்கள் கடந்து போனதை நினைத்துக் கவலை அடைவதில்ல
வரப்போவதை நினைத்து எண்ணி எண்ணி ஏங்குவதில்ல
அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்கிறார்கள்;
அதனால் பிரகாசமாக இருக்கிறார்கள்."

இந்த வழியை முழுமையாகப் பேணி வளர்த்தவர்கள் துன்பம் நேரும் போதும் உள்ளத்தில் அமைதியையும் பொறுமையையும் காண்கிறார்கள். காலம் கணிந்து வரும்போது தங்கள் செல்வங்களைப் பிறருடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைப் படுகிறார்கள். குறையற்ற வாழ்வும் வன்முறையற்ற மனோபாவங்களுடனும் வாழ்வதனால், எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் மனமும் நெஞ்சும் நிலையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

இதுவே நம் முயற்சிக்குக் கிடைத்த பழங்கள். இதனை அடைய, மற்ற பழங்களை விளைவிக்கப் பாடுபடுவது போல் மெதுவாகவும் விடாப்பிடியாகவும் தொடந்து கருணையோடு பேணிவளர்க்க வேண்டியுள்ளது. இந்தக்காரணத்தால் நம்மோடு ஒத்த உணர்வாளர்களின் தோழமை நமக்கு இன்றியமையாததாக இருக்கிறது. சங்கத்திடம் அடைக்கலம் செல்வது இதனைப் பிரதி பலிக்கிறது. பொதுவாகச் சங்கம் என்பது எல்லா ஆன்மீகத் தோழர்களையும் குறிக்கும். ஆனால் ஆன்மீகத் தோழமைக்கு உச்சக் கட்டமாகச் சொல்வது ஐயப்பாடில்லாமல் புத்தரின் பாதை கோட்பாடு களைக் காண்பிக்கும் விரிவான ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்துத் தானம் நம்பி வாழும் சமய வர்க்கத்தைத் தான்.

புத்த துறவிகள் சமயப் பிரசங்கிகள் அல்லர். அவர்கள் மற்றவர்கள் கேட்டாலொழியத் தாமாகக் கற்பிப்பதற்குத் தடையுள்ளது. அவர்கள் ஆன்மீகத் தோழர்கள். புத்தர்வழி நடக்கும் பொது மக்களுடன் இருக்கும் உறவு அன்னியோன்னியமான உதவி புரியும் உறவாகும். அவர்கள் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கும் பணம் வைத்திருக்கவும் தடையுள்ளது; அவர்கள் சமூகத்துடன் தொடர்பு வைத்திருக்கவேண்டும், உதவி பெறுவதற்குத் தகுந்தவர்களாக இருக்க வேண்டும். பௌத்த விகாரங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து ஓடி ஒளிவதற்கில்லை. மற்றவர்கள் தங்கவும், போதனைகள் பெறவும் முக்கியமாக மற்றவர்கள் செய்யும் சேவையும் உதவியும் பாராட்டதக்கதென அவர்கள் உணர வேண்டும். இப்படியாகத் துறவிகள் தோழர்களாகவும், வழிகாட்டிகளாகவும் மட்டும் இல்லாமல், மற்றவர்களுக்குத் தன்மானமும் தன்னம்பிக்கையும் வளர வாய்ப்புத் தருகிறார்கள்.
நற்செயலைச் சாதாரணமாக நினைத்து
'எதுவும் எனக்குப் பயன் தராது '
என்று சொல்லாதீர்கள்.
சீராகத் தொடர்ந்து வரும் சிறு துளிகள்
கூஜாவில் தண்ணீரை நிரப்புவது போல
அறிஞர் நல்வாழ்வை சிறிது சிறிதாக அடைகிறார்."


பின்னிணைப்பு --5

பின்னிணைப்பு
5. மணிமேகலை நூலின் காலம்

    மணிமேகலையின் காலத்தை ஆதாரத்துடன் ஆராய்ந்து எழுதுவதென்றால், அது பெரியதொரு தனி நூலாக முடியும். ஆதலின், மிகச் சுருக்கமாக எழுதுவோம். மணிமேகலையும்  சிலப்பதிகாரமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை என்பதே பலரின் கொள்கை. ஆயினும் சிலர் மட்டும் ஐயப்பாட்டிற்கிடமான சில ஆதாரங்களைக் காட்டி, இதனைப் பிற்காலத்து நூல் என்று கூறுவர். ஈண்டு,  கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மணிமேகலை எழுதப்பட்டதென்பதற்கான ஆதாரங்களை முதலில் எடுத்துக்காட்டிப் பின்னர், இதனைப் பிற்காலத்து நூல் என்று கூறுவோரின் கூற்று ஆதாரமற்றதென்பதை விளக்குவோம்.

    'மணிமேகலை'யை இயற்றிய ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரும், 'சிலப்பதிகாரத்தை'  இயற்றிய இளங்கோ அடிகளும் நண்பர்களென்பதும், சிலப்பதிகாரக் காவியத்தின் தொடர்ச்சியே மணிமேகலைக் காவியம் என்பதும் யாவரும் ஒப்புக்கொண்ட உண்மை. அன்றியும் இளங்கோ அடிகளின் தமையனான சேரன் செங்குட்டுவனுக்கும் சீத்தலைச் சாத்தனார் உற்ற நண்பர். கன்ணகியின் வரலாற்றினைச் சீத்தலைச்சாத்தனார் சொல்லக் கேட்டுக் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி அவளுக்குக் கோயில் அமைத்த செங்குட்டுவ மன்னன், இலங்கைத் தீவை அரசாண்டிருந்த கஜபாகு (கயவாகு) என்னும் அரசனைப் பத்தினிக் கடவுளான கண்ணகியின் விழாவுக்கு அழைத்திருந்தான். கஜபாகு மன்னனும் இவ்விழாவுக்கு வந்திருந்ததோடு, இலங்கைக்குச் சென்று அங்கும் கண்ணகி வணக்கத்தை ஏற்படுத்தினான். இன்றைக்கும் சிங்களவர் 'பத்தினித் தெய்யோ' (பத்தினி தெய்வம்) என்று கண்ணகியைக் கொண்டாடி வருகின்றனர். பத்தினி தெய்வ வணக்கத்தை இலங்கையில் ஏற்படுத்திய கஜபாகு வேந்தன் கி.பி. 171 முதல் 193 வரையில் இலங்கையை அரசாண்டான். இவனுக்கு 'கஜபாகு காமினி' என்னும் பெயரும் உண்டு. எனவே, கஜபாகு நண்பனான சேரன் செங்குட்டுவனும், இளங்கோவடிகளும், சீத்தலைச் சாத்தனாரும் ஒரே காலத்தவர் என்பது பெறப்பட்டது. ஆகவே, மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார்  கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றியிருக்க வேண்டும்.

    மணிமேகலை நூலில் இருபத்தேழாவது காதையில்

        "வேத வியாகனுங் கிருத கோடியும்
        ஏதமில்  சைமினி யெனுமிவ் வாசிரியர்
        பத்து மெட்டு  மாறும் பண்புறத்
        தத்தம் வகையாற் றாம்பகர்ந் திட்டனர் "

என வரும் அடிகளிற், 'கிருதகோடி' என்னும் ஆசிரியரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. "கிருத கோடி என்பது மீமாம்சை சாத்திரமாகிய வேதாந்த சூத்திரத்திற்குப் 'போதாயனர்' என்பவர் இயற்றிய உரை. 'பிரபஞ்ச ஹ்ருதயம்' என்னும் சமஸ்கிருத நூலில், மீமாம்சை சாஸ்திரம் முழுவதுக்கும் போதாயனர் என்பவர் ஒரு பாஷ்யம் (விரிவுரை) எழுதினார் என்றும், அந்த உரைக்கு 'கிருதகோடி' என்பது பெயர் என்றும், இந்த உரை மிக விரிவாக இருந்தது பற்றி 'உபவர்ஷர்' என்பவர், அதனைச் சுருக்கி அமைத்தனர் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. வேதாந்த சுத்திரத்திற்கு இராமாநுசர் எழுதிய 'ஸ்ரீபாஷ்யம்' என்னும் உரையிலும், போதாயனர் வேதாந்த சூத்திரத்திற்குப் 'பிரம்மசூத்திரம்' என்னும் விருத்தியுரை எழுதினார் என்றும், அந்த விரிவுரையைப் 'பூர்வாசாரியர் சுருக்கமாக அமைத்தார்' என்றும் கூறியிருக்கின்றார். இங்கு இவர் 'பூர்வாசாரியார்' என்று கூறுவது உபவர்ஷரை. இந்த உபவர்ஷர் என்பவர்,  கி.பி. மூன்றாம்  நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் அல்லர் என்பது ஆராய்ச்சி வல்லோர் முடிவு. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த உபவர்ஷருக்கு, முன் மீமாம்சை சாத்திரத்துக்கு ஒரே ஓர் உரை இருந்ததென்றும், அது போதாயனர் எழுதிய 'கிருதகோடி' என்னும் உரை என்றும், இந்தக் 'கிருதகோடி' உரை எழுதிய போதாயனர் கி.பி. முதல் நூற்றாண்டுக்கும்  இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்றும் ஆராய்ச்சிவல்ல அறிஞர் முடிவு கட்டியுள்ளனர். எனவே, கிருதகோடி ஆசிரியரைக் குறிப்பிடுகின்ற 'மணிமேகலை' அவ்வுரை பெரிதும் வழக்காற்றிலிருந்த   கி.பி. முதலாவது அல்லது  இரண்டாவது  நூற்றாண்டுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனைப் பற்றி முற்றும் விளக்கி எழுதினால் இடங்கொள்ளும் என்றஞ்சிச் சுருக்கமாகக் குறிக்கப்பட்டது. இதனை நன்குணர வேண்டுவோர் கீழ்க்கண்ட ஆங்கில நூல்களினால் ஐயமறத் தெளியலாம். (Vedanta Commentators before Sankaracharya by P.V. Kane, Proceedings, Fifth Indian Oriental Conference, Vol II Manimekhalai in its Historical Setting by Dr. S. Krishnaswami Aiyengar.)

    மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது ஈனயான பௌத்த மதம்; மகாயான பௌத்த மதத்தைப் பற்றி அதில் கூறப்படவில்லை. எனவே, மணிமேகலை மகாயான பௌத்தக் கொள்கைகள் பரவுதற்கு முன்பு எழுதப்பட்ட நூல் என்று விளங்குகின்றது.

    மகாயான பௌத்த மதத்தை உண்டாக்கியவர் நாகார்ஜூனர். இவரும் இவர் மாணவராகிய ஆரியதேவரும் மகாயான மத நூல்களை இயற்றி அந்த மதத்தைப் பரவச் செய்தனர். நாகர்ஜூனர், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். எப்படி எனில், கூறுவோம்: 'குமாரஜீவர்' என்னும் ஆசிரியர் கி.பி 399 முதல் 417 வரையில் பௌத்த நூல்களை எழுதினார் என்று சீன தேசத்து நூல்களினின்றும் தெரிகின்றது. இந்தக் குமாரஜீவர் கி.பி. 400 இல் நாகர்ஜூனர் சரிதத்தையும், அவர் மாணவராகிய ஆரியதேவரது சரிதத்தையும் எழுதியிருக்கின்றார்.  எனவே இவரது காலத்துக்கு ஒன்றிரண்டு நூற்றாண்டுக்கு முன்பு நாகர்ஜூனர் வாழ்ந்திருந்தவராதல் வேண்டும். நாகர்ஜூனர் 'சாதவாகன' அரசர்களின் காலத்தில் இருந்தவர் என்று தெரிகின்றபடியாலும், சாதவாகன அரசாட்சி கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியின் மங்கிவிட்ட படியாலும், நாகர்ஜூனர் அந்த நூற்றாண்டின் முற்பகுதியில், அஃதாவது கி.பி.  250 இல் வாழ்ந்திருந்தவராதல் வேண்டும். ஆசிரியர் கீத் (Prof Keith) என்பவர்,  நாகர்ஜூனர் ஏறக்குறையக் கி.பி 200-இல் வாழ்ந்திருந்தவர் என்று கூறுவதும் இதனை ஆதரிக்கின்றது. எனவே நாகர்ஜூனர்  கி.பி 200-250 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது தெளிவாகின்றது. மணிமேகலையில் 'சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை' யில் தமிழ் நாட்டிலிருந்த பல்வகைச் சமயங்களைப் பற்றிக் கூறுகின்ற சீத்தலைச் சாத்தனார், ஈனயான மதத்துக்கு மாறுபட்ட கொள்கைகளையும் தத்துவங்களையும் உடைய மகாயான மதத்தைப் பற்றிக் கூறாதிருப்பது, நாகர்ஜூனரது கொள்கைகள் பரவுவதற்கு முன்னே மணிமேகலை இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்பதைக் காட்டுகிறது. எனவே, மணிமேகலை நாகர்ஜூனருக்கு முன், அஃதாவது கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், இயற்றப்பட்டதாதல் வேண்டும். இதனைக் கீழ்க்கண்ட ஆங்கில நூல்களில் விளக்கமாக காணலாம். (The Buddhism of Manimekalai by Dr. S. Krishnaswami Aiyengar in Buddhist Studies, Edited by B.C. Law; Manimekhalai in its Historical Setting by Dr. S. Krishnaswami Aiyengar.)

    சங்கச் செய்யுள்களில் பல்லவர்களைப் பற்றிக் கூறப்படவில்லை. அதிலும் சிறப்பாகத் தமிழ்நாட்டு வேந்தர்களை ஆங்காங்குக் குறிப்பிட்டுச் செல்கின்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பல்லவ அரசர்களைக் கூறவில்லை. பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தமிழ்நாட்டின் வடபகுதியை அரசாண்ட பேர் பெற்ற மன்னர். இவர்களைப் பற்றி கூறப்படாதது பற்றி, பல்லவர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னர் 'மணிமேகலை' இயற்றப்பட்டிருக்க வேண்டும். காஞ்சிபுரத்தை அரசாண்டவன் சோழமன்னன் என்றும், அவன் 'நலங்கிள்ளி' என்பவன் தம்பி 'இளங்கிள்ளி' என்பவன் என்றும் மணிமேகலை கூறுகின்றது. பல்லவர் முதல் முதல் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியது கி.பி நாலாம் நூற்றாண்டிலென்றும், கி.பி மூன்றாம் நூற்றாண்டு  வரையிலும் சோழர்கள் சோழநாட்டிலும் தொண்டை நாட்டிலும் வலிமை பெற்றிருந்தார்களென்றும் 'குமாரவிஷ்ணு' அல்லது 'ஸ்கந்தவர்மன்' என்னும் பெயருள்ள பல்லவ அரசன் தமிழ்நாட்டின் வடக்கிலிருந்து வந்து காஞ்சிபுரத்தை முதல் முதல் கைப்பற்றினானென்றும் அவன் காஞ்சியைக் கைப்பற்றியது ஏறத்தாழக் கி.பி. 325 ஆம் ஆண்டென்றும் கூறுவர் ஹீராஸ் பாதிரியார் (Studies in Pallava History by Rev. H. Hearas.)

    பல்லவர் காஞ்சியைச் சோழரிடமிருந்து முதல் முதல் கைப்பற்றியது கி.பி. 325 ஆம் ஆண்டில் ஆகையாலும், மணிமேகலையில் கூறப்பட்டுள்ள காஞ்சியை அரசாண்ட மன்னன் சோழர் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையாலும், மணிமேகலை இந்த ஆண்டுக்கு முன் இயற்றப்பட்டதாதல் வேண்டும். ஆனால், மேலே கூறப்பட்ட கஜபாகுவின் காலத்தையும் செங்குட்டுவன் காலத்தையும், நாகர்ஜூனர் காலத்தையும், கிருதகோடி உரை இயற்றிய 'போதாயனர்' காலத்தையும் ஒப்பிட்டு நோக்கும்போது மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் கடைசியில் இயற்றப்பட்டதாதல் வேண்டும் என்பது ஐயமற விளங்குகின்றது.

    மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை விளக்க இன்னும் வேறு சான்றுகள் வேண்டுவதில்லை. இனி, இந்த நூல் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் இயற்றப்பட்டதென்று கூறுவோர் காட்டும் சான்றுகளை எடுத்துக்காட்டி, அவை தக்க சான்றுகளல்ல என்பதை விளக்குவோம்.

    1. மணிமேகலையில் 'குச்சரக்குடிகை' என வரும் சொற்றொடருக்கு உரையெழுதிய டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள், ''கூர்ச்சர தேசத்துப் பணி அமைந்த சிறிய கோயில்'   என்று எழுதியிருக்கிறார்கள். இதனை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு ஒரு சிலர், ஏனைய ஆதாரங்களையெல்லாம் மறந்துவிட்டு, மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இயற்றப்பட்ட தென்பர். கூர்ச்சரர்  கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவுக்கு வரவில்லை என்றும், கூர்ச்சரரைக் குறிப்பிடுகிறபடியால், மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு  இயற்றப்பட்ட தென்றும் கூறுவர். இந்த ஆராய்ச்சி முடிவை எதிர்த்தும், ஆதரித்தும் 'குச்சரக்குடிகை'க்கு வேறு பொருள் கற்பித்தும் அறிஞர் பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஈண்டுக் காட்டப்புகின் விரியும். ஆனால், இந்த ஆராய்ச்சி ஐயப்பாட்டுக்கு இடமான முடிவை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். 'குச்சரக்குடிகை தன்னகம் புக்கு' என வரும்   மணிமேகலை அடிகளுக்குக் 'குஞ்சக்குண்டிகை தன்னகம் புக்கு' என்னும் பாடபேதமும் காட்டப்பட்டுள்ளது; (18 ஆம் காதை, 145) இந்தப் பாடபேதம் முதற் பதிப்பில் காட்டப்படவில்லை. எதிர்வாதங்கள் எழுந்த பின்னர், பிற்பதிப்புக்களில் இந்தப் பாடபேதம் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பாடபேதம் முதற் பதிப்பிலேயே காட்டப்பட்டிருக்குமானால், பல ஆராய்ச்சியாளரின் காலமும் உழைப்பும் வீணாக்கப்பட்டிரா. ஆனால், முதல் பதிப்பின் பாடத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அதன் உரையையும் தெய்வவாக்காக கொண்டு, ஆராய்ச்சியாளரிற் சிலர் மணிமேகலை  கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என வாதித்தனர். இந்த வாதத்தை V.A. Smith  போன்ற சில மேல்நாட்டு அறிஞரும் நம்பி இடர்ப்பட்டனர். நேர்மையான பாடம் 'குச்சரக் குடிகை'யா அல்லது 'குஞ்சக் குண்டிகை' யா என்பதை முடிவுகட்டிய பின்னரே இந்த ஆராய்ச்சியில் இறங்கவேண்டும். இந்த ஐயப்பாட்டைத் தீர்க்காமல், 'கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோயில்'  என்னும் உரையை ஒப்புக்கொண்டு முடிவுகட்டுவது, வழுக்கு நிலத்தில் ஊன்று கோலின்றி நடப்பது போலாகும்.

    இனி 'குச்சரக்குடிகை' என்னும் பாடந்தான் சரியானதென்று ஒப்புக்கொள்வதாயிருந்தாலும், இச்சொற்றொடர்க்கு உரையாசிரியர் காட்டிய பொருள் தவறு என்றும், இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் என்றும் தோன்றுகின்றது. கூர்ச்சரர் கட்டடத்தொழிலில் பேர்பெற்றவர் அல்லர் என்பதை நிலைநாட்டி, இந்த உரையை மறுத்து, டாக்டர் கு. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் தாம் எழுதிய Manimekhalai in its Historical Setting  என்னும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். விரிவஞ்சி அதனை ஈண்டுக் குறிக்காமல் விடுகின்றோம்.

    'குடிகை' எனபதற்குச் 'சிறிய கோயில்' என்று எழுதப்பட்டுள்ள உரையும் சரியானதாகத் தோன்றவில்லை. 'குடிகை' என்பதற்கு ஓலையால் வேய்ந்த  குடிசை என்பதே பொருள் எனத்தோன்றுகின்றது. இந்தப் பொருளிலேயே இந்தக் 'குடிகை' என்னும் சொல்
மணிமேகலையில் வேறு இடத்திலும் வந்துள்ளது.

        "தண்டு  மண்டையும் பிடித்துக் காவலர்
        உண்டுகண் படிக்கும் உறையுட் குடிகையும்."

    நகரத்தை இரவு முழுதும் காவல் காத்த காவலாளர் காலையில் ஊண் உண்டு படுத்து உறங்கும் குடிசையை (ஓலையால் வேய்ந்த  குடிசை) இது குறிப்பிடுகின்றது. இதற்குக் குறிப்புரை எழுதியவர், "குடிகை -பர்ணசாலை. 'குடிகா' என்னும் வடமொழிச் சிதைவென்பர். இஃது இக்காலத்து 'குடிசை' என்று வழங்குகின்றது" என்று எழுதியிருக்கின்றார். இந்த உரை மிகவும் பொருத்தமானதே. ஆனால்,   'குச்சரக் குடிகை' என்பதற்குப் பொருள் எழுதியபோது, சிறிய கோயில், அஃதாவது, கட்டடத்தால் அமைந்த சிறிய கோயில் என்னும் பொருள்பட எழுதியுள்ளார். ஓரிடத்தில் 'குடிசை; என்றும், இன்னோரிடத்தில் 'கட்டடம்' என்றும் எழுதியிருக்கின்றார். இஃது எவ்வாறு பொருந்தும்?
        "உறையுட் குடிகை யுள்வரிக் கொண்ட
        மறுவில் செய்கை மணிமே கலைதான்"
        
        "உலக வறவியும் முதியாள் குடிகையும்"

என வரும் அடிகளில், 'குடிகை' என்பதற்குக் குடிசை, ஓலையால் வேய்ந்த பர்ணசாலை என்றே பொருள் கொள்ளத் தக்கதாயிருக்கின்றது. சம்பாபதி கோயில் சுடுகாட்டை அடுத்திருந்த ஒரு கோயில். 'உலகவறவி' என்னும் மன்றத்தில் ஒரு புறத்தில் அஃது அமைந்திருந்தது. இந்தக் கோயிலின் கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தது. இப்பொழுதும் சில கிராமதேவதை கோயில்கள் ஓலைக்கொட்டகையால் அமைந்திருப்பதைக் காணலாம். ஓலையால் கொட்டகை அமைக்கக் கூர்ச்சர தேசத்திலிருந்து தொழிலாளர் வரவேண்டுவதில்லை. எனவே, 'குச்சரக் குடிகை' என்பதே சரியான பாடமாயிருந்தாலுங்கூட, அதற்கு வேறு பொருள் இருக்கவேண்டுமே தவிர 'கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோயில்'  என்னும் பொருள் சிறிதும் பொருந்தாது. ஆகவே, இதை ஆதாரமாகக் கொண்டு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மணிமேகலை எழுதப்பட்டதென்பது அறிவுக்குச் சிறிதும் பொருத்தமானதன்று. இதனை மேலும் விளக்கப்புகின் விரியும் என்றஞ்சி இதோடு நிறுத்துகின்றோம்.

    சாவகத்தீவில் பௌத்த மதம் பெரிதும் பரவியிருந்ததென்பது மணிமேகலையினால் அறியப்படுகின்றது. 'சாவகம்' என்பது இப்போதுள்ள் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான சுமத்திரா தீவு என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். இந்தச் சுமத்திரா தீவுக்குக் கி.பி.  400 இல் சென்ற 'பாஹியன்' (Fa-Hien)  என்னும் சீனர், அங்குப் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருக்கிறதென்றும், பௌத்த மதம் தாழ்மையான நிலையில் இருக்கிறதென்றும் எழுதியிருக்கிறார். ஆனால், கி.பி 600 இல் இந்தத் தீவுக்குச் சென்ற 'இத்-ஸிங்' (It Sing) என்னும் சீனர் இங்குப் பௌத்த மதம் செழித்தோங்கியிருக்கிறதென்று எழுதியிருக்கின்றார். இதனை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி மணிமேகலையில் சாவகத் தீவில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்ததாகக் கூறியிருப்பதனாலும்,  இத்ஸிங்  என்பவரும்  அவ்வாறே கூறியிருப்பதனாலும், பாஹியன் காலத்தில் அஃது இங்குச் செல்வாக்குப் பெறாதிருந்தபடியாலும், கி.பி. 400-600 இடைப்பட்ட காலத்தில் சுமத்திரா தீவில் பௌத்தம் செல்வாக்குற்றிருக்க வேண்டும் என்றும், ஆகவே அதனைக் குறிப்பிடுகின்ற மணிமேகலை இந்தக் காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் சில ஆராய்ச்சியாளர் கூறுவர்.

    இஃது ஐயப்பாட்டுக்கிடமான போலிக் காரணம் என்று திரு. V.R.  இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்கள் எழுதியுள்ளதைக் காட்டி விளக்குவோம். இந்தக் கூற்றை இவர் கீழ்வருமாறு மறுக்கிறார்:

    முதலாவது, பாஹியான் இந்த விஷயத்தைப் பற்றிச் சரியான செய்தியைத் தரவில்லை. ஒருவேளை, சுமத்திரா தீவில் இவர் சென்ற பகுதியில் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம்.

    இரண்டாவது, ஆபுத்திரன் சுமத்திரா தீவை அரசாண்டபோது, அஃதாவது கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில், செல்வாக்குற்றிருந்த பௌத்த மதம் கி.பி. 400 இல் சீன யாத்திரிகர் சென்றபோது, செல்வாக்குக் குன்றியிருக்கக் கூடும். பின்னர், மீண்டும் அதன் செல்வாக்கு நிலைபெற்று, கி.பி 620 இல் சென்ற சீன யாத்திரிகர் காலத்தில் சிறப்படைந்திருக்கக் கூடும்.

    மூன்றாவது, மணிமேகலையின் காலத்தைக் கி.பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் அமைக்கவேண்டும். மூன்றாவது சொல்லிய முடிபு எமக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. மற்ற ஆதாரங்களுக்கும் சான்றுகளுக்கும் இது பொருத்தமாக இருக்கவில்லை. ஆகவே முதலாவது அல்லது இரண்டாவது சொன்ன முடிவுகளில் ஒன்றையே நாம் மேற்கொள்ள வேண்டும்.

    இவர் கருத்து என்னவென்றால், கி.பி. 400-க்கும், 600-க்கும்  இடைப்பட்ட காலத்தில் மணிமேகலை இயற்றப்பட்டதென்பது ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல; அது கிறிஸ்து சகாப்தத்தின் (Buddhism in Tamil Literature. Chapter XXVII, Buddhistic Studies: Edited by B.C. Law) தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது.

    பாஹியன் என்னும் சீன யாத்திரிகர், இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் கப்பல் வழியாகக் கி.பி. 413 இல் சென்றபோது, இடையிலே யவதீவத்தில் தங்கினார் என்றும், அப்போது அந்தத் தீவில் பௌத்த மதம் நன்கு பரவியிருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர் கூறுகிற யவதீவம் என்பது ஜாவா தீவு என்பர் சிலர். சிலர் சுமாத்ரா தீவு என்பர். யவதீவம் என்பது சுமாத்ரா தீவும் அன்று ஜாவா தீவும் அன்று; மற்றொரு தீவாகிய போர்னியோ தீவு என்பர் ஆராய்ச்சி வல்லார். ஆகவே சாவகத் தீவில் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இருந்ததில்லை என்று இவர்கள் கூறுகிற வாதம் சிறிதும் பொருத்தமற்றது.

    மணிமேகலை சற்று எளிய நடையில் அமைந்திருப்பதும், அதில் வரும் 'மாதவி','சுதமதி','மணிமேகலை','சித்திராபதி','சங்கதருமன்' முதலான பெயர்கள் சங்க நூல்களில் காணப்படாத வடநாட்டுப் பெயர்களாகவிருப்பதும் பற்றி இந்த நூல் பிற்காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவர் சிலர்.

    மணிமேகலையை இயற்றிய சாத்தனார் இந்நூலைப் பண்டிதர்களுக்கு மட்டும் இயற்றினாரில்லை; புலமை நிரம்பாத மற்றவர்களுக்கும் விளங்கவேண்டும் என்பதே அவரது கருத்து. ஏனென்றால், பௌத்த மதத்தையும் அதன் கொள்கைகளையும் பல்லோருக்கும் அறிவிக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு இஃது இயறப்பட்டதாகத் தெரிகின்றது. பௌத்தரும் ஜைனரும் தங்கள் மதக் கொள்கைகளைப் பல்லோருக்கும் விளங்கும்படி எழுதவும் பேசவும் வேண்டும் என்பது அம்மதங்களின் கொள்கை. 'பௌத்தரும் தமிழும்' அதிகாரம் காண்க.

    மணிமேகலையில் குறிப்பிட்டுள்ள மக்கட் பெயர்கள் பெரும்பான்மையும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன வென்பது உண்மையே. வடமொழிப் பெயராக இருப்பது கொண்டு பிற்காலத்து நூலென்று சொல்வதற்கில்லை. பௌத்தம், ஜைனம் முதலான மதங்கள் வடநாட்டினின்று வந்த மதங்கள். ஆகையால், அம்மதங்களை மேற்கொண்ட தமிழர்களுக்கு அம்மதச் சார்பான வடமொழிப் பெயர்கள் அமைப்பது இயல்பு. இப்பொழுதும் தமிழன் கிறித்தவனாகவோ முகம்மதியனாகவோ மதம் மாறினால் 'அந்தோனி', 'ஜான்','ஜோசப்' முதலிய பெயர்களையாவது, 'அப்துல்லா','ரஹ்மான்','யூசூப்' முதலிய பெயர்களையாவது அம்மதச் சார்பு பற்றிச் சூட்டிக்கொள்கிறான். அதுபோல, பௌத்த வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப் பௌத்தர் சூட்டிக்கொண்டதில் வியப்பு இல்லை. இனி, சங்க நூல்களில் வடமொழிப் பெயர்கள் காணப்படவில்லை என்பதும் தவறு. சங்கச் செய்யுள்களை இயற்றியவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டவர் 'சாத்தனார்' என்னும் பெயர் கொண்டிருக்கிறார். இப்பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் தமிழ்த்திரிபு. '(இளம்) போதியார்' என்னும் பெயர் வடமொழி. 'நிகண்டனார் (கலைக்கோட்டுத் தண்டனார்)' என்பது வடமொழிச் சிதைவு. 'கோவலன்' என்பது 'கோபாலன்' என்பதன் திரிபு. 'கோதமனார் பிரமனார்','தாமோதரனார்','(சோழன்) நல்லுருத்திரன்','(ஆவூர்க் காவிதிகள்) சாதேவனார்', 'பிரமசாரி', 'பெருங் கௌசிகனார்', 'பெரும்பதுமனார்' முதலிய பெயர்கள் வடமொழிப் பெயர்களே. இப்பெயருள்ளவர்கள் இயற்றிய செய்யுள்கள் நற்றிணை, புறநானூறு முதலிய நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, சங்ககாலத்தில் வடமொழிப் பெயர்கள் இருந்ததில்லை என்று கூறுவது தவறு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே, வடநாட்டவரான ஜைன மதத்தவரும், பௌத்த மதத்தவரும், வைதீக மதத்தவரும் தென்னாட்டிற்கு வந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள. அங்ஙனமிருக்க, கடைச்சங்க நூல்களில் சில வடமொழிப் பெயர்களும் காணப்படுவதில் வியப்பில்லை. ஆகவே, வடமொழிப் பெயர்கள் காணப்படுவது கொண்டு 'மணிமேகலை; காலத்தால் பிற்பட்ட நூலென்று கருதுவது தவறு.

    மணிமேகலை சிலப்பதிகார வரலாற்று நிகழ்ச்சிகள் சேர சோழ பாண்டியர் ஆட்சிக்காலத்தில் (கடைச்சங்க காலத்தில்) நிகழ்ந்தவை. அந்நிகழ்ச்சிகள் நடந்த அண்மைக் காலத்திலேயே இந்நூல்கள் இயற்றப்பட்டவை. ஆகவே இந்நூல்கள் கி.பி 200-க்குள் எழுதப்பட்டவை. கி.பி. 200-க்குப் பிறகு தமிழ்நாட்டைக் களபரர் பிடித்துக் கொண்டு ஏறத்தாழக் கி.பி 575 வரையில் அரசாண்டார்கள். ஆகவே கி.பி 200-க்குப் பின்னர் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதப்பட்டிருக்க முடியாது. கி.பி 200-க்குள்ளேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.











பின்னிணைப்பு - 4

பின்னிணைப்பு
4. ஆசிவக மதம்

    அழிந்தொழிந்துபோன இந்த மதம் இப்போது முழுதும் மறக்கப்பட்டிருப்பதால், இதைப் பற்றிக் கூறுவது அமைவுடையது.

    பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வடஇந்தியாவில் தோன்றியது. இந்த  மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரி புத்திரர் என்பவர். பாலி மொழியில் இப்பெயர் மக்கலி புத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் 'கோசால' என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலி புத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி என்று கூறும்.

    'மக்கலி' என்பது வடநாட்டில் பண்டைக்காலத்தில் இருந்த இரந்துண்டு வாழும் ஒருவகைக் கூட்டத்தார்க்குப் பெயர் என்றும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் ஆகையால் இவருக்கு 'மக்கலி புத்திரர்' என்னும் பெயர் வந்ததென்றும் சிலர் கூறுவர். 'மக்கலி' என்பது இவருடைய தந்தையின் பெயர். ஆகையால் இவருக்கு 'மக்கலி புத்திரர்' என்னும் பெயர் வழங்கியதென்று வேறு சிலர் உரைப்பர்.

    மக்கலி அல்லது மற்கலி என்பவர், ஆருகத மதத்தையுண்டாக்கிய மகாவீரரும், பௌத்த மதத்தையுண்டாக்கிய கௌதமபுத்தரும் உயிர்வாழ்ந்திருந்த அதே காலத்தில் இருந்தவர். மகாவீரர் ஆருகத மதக்கொள்கையை உலகத்தாருக்குப் போதித்து வந்த காலத்தில் அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்வியுற்ற மற்கலி அவரிடம் சென்று அவரைச் சார்ந்திருக்க விரும்பினார். ஆனால், மற்கலியின் மாறுபட்ட ஒழுக்கங்களையும் குணங்களையும் அறிந்த மகாவீரர், அவர் தம்மைச் சார்ந்திருக்க உடன்படவில்லை. ஆயினும், மற்கலி எவ்வாறோ மகாவீரரின் உடன்பாடு பெற்று, அவருடன் சில ஆண்டு தங்கியிருந்தார். பின்னர், அவருடன் மாறுபட்டுத் தனியே பிரிந்துபோய், ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார். அதுதான் 'ஆசிவக மதம்' அல்லது 'ஆஜீவகமதம்' என்பது. ஆருகத மதக்கொள்கைகள் சிலவற்றையும், தாம் உண்மை என்று கண்ட கொள்கைகளையும் திரட்டி, மற்கலி இந்த மதத்தை உண்டாக்கினாரென்று சொல்லப்படுகின்றது.

    சற்றேறத்தாழ, கி.மு. 500 இல் மற்கலி காலமானார் என்று கருதப்படுகின்றது. இவர் காலஞ்சென்ற பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவீரர் வீடுபெற்றார் என்பர். மாகாவீரர் வீடுபெற்ற சில ஆண்டுகளுக்குப் பின்னர், கௌதமபுத்தர் நிர்வாணம் அடைந்தார்.

    ஆசீவகர், பௌத்தர், ஜைனர், வைதீகர் ஆகிய மதத்தவர்களுக்குள் எப்போதும் சமயப்பகை இருந்து கொண்டிருந்தது.

    ஆசீவக மதக்கொள்கைகளைக் கூறும் நூலுக்கு 'நவகதிர்'  என்பது பெயர். இந்த நூலில் நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு என்னும் ஐம்பொருளைப் பற்றிக் கூறியுள்ளதென்பர். கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூயவெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும், தூய வெண்மைப் பிறப்புத்தான் மிக உயர்நிலைப் பிறப்பென்பதும், இப்பிறப்பினை அடைந்தவர் தாம் வீட்டுலகம் சேர்வர் என்பதும் இந்த மதக்கொள்கை. எண்பத்து நான்கு இலட்சம் மகா கல்ப காலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழலுமென்றும், அந்தக் காலம் கடந்ததும் அவை வீடுபேறடையுமென்றும், இந்த நியதிமாறி உயிர்கள் வீடு பேறடையாவென்றும் கொண்டது இந்த மதம் என்பர். இந்த நியதிக்கு நூலுருண்டை உதாரணமாகக் கூறப்படும். ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு வரையில்தான் அது நீளுமே தவிர, அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ நீளாதது போல, உயிர்கள் யாவும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல செயல்களைச் செய்பவன் விரைவில் வீடு பெறான்.  அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரையில் அவன் பிறந்து இறந்து உழன்றே ஆகவேண்டும். மோட்சமடையும் நிலையிலிருந்து ஒருவன் காலநியதியைக் கடந்து, தீயகருமங்கள் செய்து மீண்டும் பிறந்திறந்து உழல முயன்றாலும், அவன் அவ்வாறு செய்ய இயலாது என்பதும் அவனுக்கு ஏற்பட்ட நியதிப்படி அவன் வீடுபேறடைந்தாக வேண்டும் என்பது இம்மதக் கொள்கைகளில் சிலவாம்.

    நவகதிரையன்றி, 'ஆதித்தியம்' என்னும் நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தெரிகின்றது. இது, "ஆசீவக சங்க சமயத்தவருக்கு ஆதித்தியமென்பதொரு நூலுண்டு. மற்றது ஆதித்தனைப் பற்றியிருக்கும்; அது சோதிசாத்திரமென உணர்க. அன்றியேயும், ஆதித்தனைப் போல மீண்டும் அவர் வானமண்டல வரவுடையாரெனப்படுவர்" என்று கூறும் தக்கயாகப்பரணி (183-ஆம் தாழிசை) உரைப்பகுதியினால் இது அறியப்படும்.

    மற்கலிக்குப் 'பூரணர்' என்னும் பெயரும் உண்டு. களங்கமற்ற ஞானமுடையவராகலின், அவருக்கு இப்பெயர் உண்டாயிற்றென்பர். இந்தப் பூரணருடைய இயல்பு கீழ்க்கண்டவாறு 'நீலகேசி'  என்னும் நூலில் கூறப்பட்டிருக்கின்றது.

        'உரையா னிறைவ னுணலு மிலனாய்த்
        திரையா னரையான் றெரிவில் லுருவம்
        வரையா வகைவா னிடுவில் லனையன்
        புரையா வறிவிற் புகழ்பூ ரணனே.'
                                        (ஆஜீவக வாதச் சருக்கம் 15 - ஆம் செய்யுள்)

    (உரை) 'வாக்கியப் பிரவிருத்தியும், புத்தியும், நரை திரை முதலாயினவுமுடையனல்லனாகி ஆகாசதலத்து இந்திர தனுசுபோலத் தோன்றும் தோற்றத்தையுடையனாகிக் குற்றப்படாத அறிவையுடையவன் பூரணனென்னும் எம்முடைய ஆப்தன் என்றவாறு.'

    ஆசீவக மதத்துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்பது தக்கயாகப்பரணியுரையினால் அறியப்படுகின்றது. இதனை,

        'தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்
        பாழியிற் பிணங்களுந் துளப்பெழப் படுத்தியே'

என்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர் 'தாழி-முதுமக்கட் சாடி .. தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம்செய்வராதலின், அவரைச் சுட்டிநின்றது' என்று எழுதியிருப்பதினின்றும் துணியலாம்.

    மேலே காட்டிய உரைப்பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகிறது. அஃதாவது, ஆசீவகமதம் ஆருகதமதமாகிய ஜைனமதத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், 'மணிமேகலை','நீலகேசி' என்னும் நூல்களில், ஆருகதமதம் (ஜைனம்) வேறு, ஆசீவக மதம் வேறு என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் இந்த மதம் ஜைன மதத்தின் ஒரு பிரிவு எனத் தவறாகக் கருதப்பட்டது. இத்தவற்றினைத்தான் மேலே காட்டியபடி தக்கயாகப்பரணி உரையாசிரியர் எழுதியிருக்கிறார். நிகண்டுகளும் ஆசீவக மதம், ஆருகத மதத்தின் பிரிவு என்றே கூறுகின்றன.

    'சாவகர் அருகர் சமணர் ஆகும்;
    ஆசீ வகரும் அத்தவத் தோரே'             (சேந்தன் திவாகரம்)

    'சாவகர் அருகர் சமணர் அமணர்
    ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே'      (பிங்கலநிகண்டு)

    'சிவஞான சித்தியார்' என்னும் சைவ சமய நூலிலே, இந்த மதம் ஜைன மதத்தின் பிரிவுகளில் ஒன்றாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். 'திகம்பரமொப்பினும் அநேகாந்தவாதிகளாகிய நிர்க்கந்த ஆசீவகனென்க' என்று எழுதியிருக்கிறார். அஃதாவது, ஆசீவகர் ஜைனரில் திகம்பரரை (நிர்க்கந்தரை)ப் போன்ற கொள்கையுடையவரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். 'மணிமேகலை', 'நீலகேசி' என்னும் இரண்டு நூல்களைத் தவிரப் பிற்காலத்து நூல்களாகிய  'சிவஞான சித்தியார்' , 'தக்கயாகப்பரணி', 'திவாகரம்',  'பிங்கலநிகண்டு' முதலானவை ஆசீவகமதத்தை (திகம்பர) ஜைன மதம்  என்றே கூறுகின்றன. இவ்வாறு கருதப்பட்டதற்குக் காரணம் ஆசீவகமதத்தவரும் திகம்பர ஜைன மதத்தவரும் மேற்கொண்டு வந்த பொதுவான சில கொள்கைகளாகும். உடையின்றி யிருத்தலும், குளியாமல் அழுக்குடம்புடன் இருத்தலும் இவை போன்ற சில வெளிப்பார்வைக்குப்  பொதுவாகத் தோன்றிய கொள்கைகளைக் கண்டு, இவ்விரு சமயத்தவரும் ஒரே சமயத்தவரென்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். வெளியொழுக்கத்தில் ஒன்றாகத் தோன்றினாலும் இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை. இவ்வாறு ஆசீவகமதத்தினர் திகம்பர ஜைன மதத்தினராகப் பிறகாலத்தில் தவறாகக் கருதப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமன்று வடநாட்டிலும் அவர் இவ்வாறே கருதப்பட்டு வந்தனர்.

    இந்த மதத்தைப் பற்றிய உண்மை வரலாறுகளும் கொள்கைகளும் இப்போது முழுவதும் கிடைக்கவில்லை. இப்போது கிடைப்பன எல்லாம் இந்த மதத்தின் பகைவர்களால் எழுதப்பட்டவை. ஆகவே, நடுநின்று கூறாமல் சார்பு பற்றிக் கூறியுள்ளன என்று கருதப்படுகின்றது. 'மணிமேகலை' என்னும் பௌத்த நூலிலும்  (சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை),  'நீலகேசி' என்னும் ஜைன நூலிலும் (ஆசீவகவாதச் சருக்கம்),  'சிவஞான சித்தியார்'  என்னும் சைவ நூலிலும் (பரபக்கம் ஆசீவக மதம்) இந்த மதக்கொள்கைகள் எடுத்துக் கூறி மறுக்கப்பட்டுள்ளன. இந்த மதத்தைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு மேற்சொன்ன தமிழ் நூல்களும் (Encyclopaedia of Religion and Ethics by James Hashings)  என்னும் நூலும் உதவி புரியும்.

    இந்த மதம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது. தமிழ்நாட்டிலே சமதண்டம் என்னும் ஊரிலே இந்த மதத் தலைவர்கள் இருந்ததாக 'நீலகெசி' என்னும் நூல் கூறுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும், கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவுபூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

        'கண்ணகி தாதை கடவுளர் கோலத்
        தண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்
        புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும்'
                                                  (நீர்ப்படைக்காதை)

என வரும் அடிகளால் அறியலாம்.

    இராசராச சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட சிலாசாசனங்களில் 'ஆசுவ கடமை' என்னும் ஆயம் (வரி) குறிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு, ஆசீவகமதத்தாருக்கு அக்காலத்தில் ஆயம் விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுவர் சிலர். இதை மறுத்து, சாசனங்களில் கூறப்பட்டுள்ள 'ஆசுவ கடமை' என்பது செம்பு அல்லது பித்தளைப் பாத்திரங்களைச் செய்யும் கன்னாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்குமே தவிர, ஆசீவக மதத்தாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்காது என்றும், அவ்வாறு கூறுவது தவறு என்றும் பேராசிரியர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் தாம் பதிப்பித்துள்ள 'நீலகேசி' யின் ஆங்கில முன்னுரையில் விளக்கமாக எழுதியிருக்கின்றார்கள். ஆகவே,  ஆசீவக மதத்தாருக்கு இறை விதிக்கப்பட்டிருந்ததாகக் கருதுவது தவறாகும்.

பின்னிணைப்பு -3

பின்னிணைப்பு
3. பௌத்தமதத் தெய்வங்கள்

1. கடற்காவல் தெய்வம் மணிமேகலை

    பௌத்தமதத்தின் உயர்ந்த தெய்வம் புத்தர் பெருமான். புத்தர் பரிநிர்வாணம் அடைந்தபிறகு அவருடைய உடம்பைக் கொளுத்தி அதில் எஞ்சிய எலும்பு சாம்பல் ஆகிய இவற்றை எட்டுப் பங்காகப் பங்கிட்டு ஒவ்வொரு பங்கையும் ஒவ்வோர் ஊரில் கொண்டுபோய்ப் புதைத்து அதன்மேல் சேதியங்களைக் கட்டினார்கள். புத்தருடைய தலைமயிர், நகம், பல் முதலிய தாதுக்களையும் சேமித்து அவற்றின்மேல் சேதியங்களைக் கட்டினார்கள். இவற்றிற்குச் சாரீரிக சைத்தியம் என்பது பெயர். சேதியம் எனினும் சைத்தியம் எனினும் ஒன்றே.

    புத்தர் பெருமான் உபயோகித்துவந்த கைத்தடி, ஆடை, பாத்திரம், மிதியடி முதலிய பொருள்களையும் சேமித்து வைத்து, அவரின் நினைவுக்குறியாக அவற்றை வணங்கினார்கள். இவற்றிற்குப் பாரிபோக சைத்தியம் என்பது பெயர். புத்தகயாவில் புத்தர் போதிஞானம் பெற்ற அரசமரம் இன்றும் வணங்கப்படுகிறது. இந்த அரசமரமும் பாரிபோக சைத்தியமாகும்.

    பகவன் புத்தர் காலமான பிறகு சில நூற்றாண்டு வரையில் அவருக்கு உருவம் அமைக்கப்படவில்லை. ஆனால், தரும பீடிகை, பாதபீடிகை ஆகிய உருவங்கள் மட்டும் பௌத்தர்களால் வணங்கப்பட்டன. தருமபீடிகை என்பது சக்கரம் போன்ற உருவமாக அமைக்கப்பட்டது. பாதபீடிகை என்பது புத்தரின் பாதங்கள் போன்று உருவம் அமைத்து வணங்கப்பட்டது.

    சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு புத்தரின் உருவங்கள் கல், கதை, செம்பு முதலிய  பொருள்களால் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டன. இவ்வுருவங்களுக்கு உத்தேசிக சைத்தியம் என்பது பெயர்.

    பௌத்தர்கள் புத்தரின் உருவங்களை வணங்கி வந்ததோடு, வேறுசில சிறு தெய்வங்களையும் வணங்கி வந்தார்கள். அந்தத் தெய்வங்களைப்பற்றி கூறுவோம்.

    சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்னும் வணிகன் மகளுக்கு மணிமேகலை என்பது பெயர். இந்த மணிமேகலையைப் பற்றித் 'தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்' என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம்.

    இந்த மணிமேகலையைக் கதைத் தலைவியாகக் கொண்டு, அவளது வரலாற்றினைக் கூறும் சீத்தலைச் சாத்தனாரியற்றிய காப்பியத்துக்கும் 'மணிமேகலை' என்பது பெயர். இந்த நூலினைப் பற்றித் ' தமிழ்ப் பௌத்த நூல்கள்' என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம்.

    இங்கு 'மணிமேகலை' என்னும் கடல் தெய்வத்தைப் பற்றி ஆராய்வோம். இந்தத் தெய்வம் 'சமுத்திர மணிமேகலை' என்றும் கூறப்படும். 'முது மணிமேகலை' என்றும் கூறுவர். இது பௌத்தர்களுக்குரிய சிறு தெய்வங்களில் ஒன்று. இதன் வரலாறு வருமாறு:

    பௌத்தர்களுக்குரிய ஆறு தெய்வலோகங்களுள் 'மகாராஜிக லோகம்' என்பது ஒன்று. இந்த உலகத்தின் குணதிசையைத் 'திருதராட்டிரர்' என்பவரும், குடதிசையை 'விருபாக்ஷர்' என்பவரும்,  வடதிசையைத் 'வைசிரவணர்' என்பவரும் ஆட்சி செய்து வருகின்றார்கள். இவர்களுக்குச் 'சாதுர் மகராஜிகர்' என்பது பெயர்.  துடிதலோகத்தில் வீற்றிருக்கும் போதிசத்துவர் மாயாதேவியின் திருவயிற்றில் கருத்தரித்து மண்ணுலகிற் பிறந்து வாழ்ந்து இறுதியில் பரிநிர்வாணம் அடைகின்றவரையில், அவருக்கு யாதோர் இடையூறும் நேரிடாவண்ணம் காப்பதாக மேற்சொன்ன நான்கு தெய்வ அரசர்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அன்றியும், பௌத்த தர்மத்தைப் பின்பற்றி யொழுகும் நல்லோர்க்கும், பெற்றோர், ஆசிரியர் முதலியவரை வழிபட்டொழுகும் சீரியோர்க்கும் யாதேனும் இடையூறு நேரிடுமாயின், அவற்றினின்று அன்னவரைக் காப்பாற்றவும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இவ்வாறு கடமை ஏற்றுக்கொண்ட இவர்கள் மண்ணுலகில் ஆங்காங்க்கே சிறு தெய்வங்களை இருக்கச் செய்து, நல்லோருக்கு நேரிடும் துன்பத்தைத் தீர்க்கும்படி அச் சிறு தெய்வங்களுக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு இருத்தப்பட்ட தெய்வங்களில் மணிமேகலையும் ஒன்று. கடலில் கப்பல் யாத்திரை செய்யும் நல்லோருக்கு இடுக்கண் நேரிடுமாயின், அன்னவரின் துயர்தீர்த்து உதவிசெய்வது மணிமேகலைத் தெய்வத்தின் பொறுப்புவாய்ந்த கடமையாகும்.


    இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட மணிமேகலை, தனது கடமையைச் செய்துவருவதாகப் பௌத்தர்கள் கருதுகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் உடைந்து நீரில் மூழ்கி இறக்குந்  தறுவாயிலிருந்த நல்லோரை இந்தத் தெய்வம் காப்பாற்றிய செய்திகள் பௌத்த நூல்களில் கூறப்பட்டுள்ளன. மிகப் பழைமையானதென்று கருதப்படுகின்ற புத்தஜாதகக் கதைகளில் இரண்டு இடங்களில் இத்தெய்வத்தைப் பற்றிய வரலாறு கூறப்படுகின்றது. அவற்றின் சுருக்கமான வரலாற்றினைக் கீழே தருகின்றோம்.

    சங்கஜாதகம்: 'மோலினி' என்னும் பெயருடைய காசிமா நகரத்தில் சங்கன் என்னும் அந்தணன் செல்வத்திற் சிறந்தவன். இவன் காசிநகரத்தின் நான்கு கோட்டை வாயிலிலும், நகரத்தின் நடுவிலும் தனது இல்லத்திலும் ஆக ஆறு அறச்சாலைகள் அமைத்து நாள்தோறும் அறவினையை முட்டின்றிச் செய்துவந்தான். ஒருநாள் இவன் 'குன்றத்தனை செல்வமும் ஒரு காலத்தில் குன்றும். அக்காலத்து அறம் செய்யப் பொருள் முட்டுப்படுவதற்கு முன்னரே யான் மேன்மேலும் பொருள் ஈட்டுவேன்' என்று சிந்தித்துத் தேர்ந்து மனைவியை அழைத்து அவளுக்குத் தன் கருத்தைத் தெரிவித்து, 'யான் திரும்பிவருமளவும் நான் செய்துவரும் இவ்வறச்சாலைகளைச் செவ்வனே நடத்திக் கொண்டிரு'  என்று கட்டளையிட்டு, சொர்ணபூமி என்னும் பர்மா தேசத்திற்குச் செல்லப் புறப்பட்டான். ஏவலாளர் தன் பின்னர் வர, இவன் காலில் செருப்பணிந்து, குடைபிடித்துச் செல்லும்போது, நண்பகல் ஆயிற்று. அப்போது கந்தமாதன மலையில் வீற்றிருந்த  பாச்சகபுத்தர் என்னும் போதிசத்வர் இந்தச் சங்கன் என்னும் அந்தணன் போவதையறிந்து, ஒரு மனிதனாக உருக்கொண்டு, அனல்வீசும் மணல்வழியே செருப்பும் குடையுமின்றி இவன் எதிரில் தோன்றினார். ஓர் ஆள் வெயிலில் வாட்டமுற்று வருந்தி வருவதைக் கண்ட சங்கன்,அந்த வழிப்போக்கனை அருகில் அழைத்து, ஒரு மரநிழலில் அமரச்செய்து, காலை நீர்கொண்டு கழுவி, தான் அணிந்திருந்த செருப்பைத் துடைத்து எண்ணெயிட்டு அவருக்குக் கொடுத்ததுமின்றி, தன் குடையினையும் கொடுத்துதவினான். இவற்றைப் பெற்றுக்கொண்ட அந்த ஆள் தமது உண்மை உருவத்தோடு வானத்தில் பறந்து தம் இருப்பிடம் சேர்ந்தார்.

    பிறகு சங்கன் துறைமுகம் அடைந்து, கப்பலேறிக் கடல்யாத்திரை புறப்பட்டான். கப்பல் கடலில் ஏழு நாள்கள் சென்றன. ஏழுநாள்களுக்குப் பின்னர், புயலடித்துக் கப்பல் பாறைமேல்  மோதி உடைந்துவிட, பிரயாணிகள் மூழ்கி இறந்தனர். சங்கனும் அவன் வேலையாள் ஒருவனும் உயிருடன் கடலைக் கையினால் நீந்திக் கொண்டிருந்தனர். ஏழுநாள் வரையில் இவர்கள் நீந்திக் கொண்டிருந்தனர். அப்போது கடற்தெய்வமாகிய மணிமேகலை அங்குவந்து சங்கன் கண்களுக்கு மட்டும் தோன்றி, தங்கத்தட்டில் அமிர்தம் போன்ற அறுசுவை உணவை அவனுக்குக் கொடுத்தது. அதனைச் சங்கன் மறுத்து 'இன்று உபவாசநாள்; ஆகையால், இன்று நான் உணவு உட்கொள்ளேன்.' என்றான். சங்கன் தனக்குள் ஏதோ உளறுகிறான் என்று அவனுடன் நீந்திக் கொண்டிருந்த வேலையாள் கருதி, 'ஐயா, என்ன பிதற்றுகின்றீர்?' என்றான். சங்கன், 'நான் பிதற்றவில்லை; என் கண்முன் நிற்கும் பெண்முன் பேசுகிறேன்' என்றான். ஏவலாளன், 'அங்ஙனமாயின் அவள் மண்ணுலக மங்கையா, தெய்வலோகத் தெய்வமா என்பதைக் கேளும் அன்றியும் இப்போது இந்தத் துன்பத்தினின்றும் காப்பாற்ற உதவி செய்ய முடியுமா என்றும் கேளும்' என்றான். சங்கன் மணிமேகலையை இக்கேள்விகளைக் கேட்க, அவள், 'நான் இக்கடலில் வாழ்கின்ற தெய்வம். நீ செய்த நற்செயலுக்காக உன்னைக் காப்பாற்ற வேண்டுவது எனது கடமையாதலால் நான் இவ்விடம் வந்தேன். நீ இப்பொது எங்குச் செல்ல விரும்புகின்றாய்?' என்று கேட்க, அவன் 'எனது காசிமாநகரம் செல்லவேண்டும்' என்று சொன்னான். உடனே மணிமேகலை தனது தெய்வ ஆற்றலினால் பெரிய கப்பல் ஒன்றினைச் செய்தது. அது நிறைய விலையுயர்ந்த பண்டங்களை அமைத்துச் சங்கனையும் அவனது ஏவலாளையும் அதில் ஏற்றி, தானே கப்பலைச் செலுத்திக் காசிமாநகரம் கொண்டு போய்விட்டது.

    'மகாஜனக ஜாதகம்' என்னும் கதையிலும் இந்தத் தெய்வம் உதவி செய்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் பின்வருவது:

    மிதிலை தேசத்து அரசன் ஜனகன் என்பவனுக்கு அரிட்டஜனகன், பொலஜனகன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். தகப்பன் இறந்த பின்னர், மூத்தவனான அரிட்டஜனகன் அரசனானான். இப்போது இளையவனான பொலஜனகன் தமையன் மேல் பகைகொண்டு, படை திரட்டி வந்து சண்டை செய்தான். சண்டையில் அரிட்டஜனகன் இறக்க, அவன் தம்பி அரசனானான். இறந்த அரிட்டஜனகனின் மனைவி, அப்போது வயிறு வாய்த்திருந்தவள், பெருஞ் செல்வத்தை எடுத்துக்கொண்டு, ஒருவருமறியாமல் சண்பை நகரம் சென்று, அங்கு ஓர் ஆண்மகவைப் பெற்றாள். அக்குழந்தைக்கு மகாஜனகன் என்று பெயர் இடப்பட்டது. குழந்தையாகிய மகாஜனகன் பெரியவனாக வளர்ந்தபிறகு, தன் சிற்றப்பன் தனது நாட்டைக் கவர்ந்து ஆள்கிறான் என்பதறிந்து, தன் நாட்டை மீட்கக் கருதி, அதன் பொருட்டுச் செல்வம் தேட உறுதி கொண்டான். இக்கருத்தைத் தன் தாய்க்குத் தெரிவித்து, அவள் உத்தரவு பெற்றுக் கப்பல் ஏறிச் சுவர்ண பூமிக்குப் புறப்பட்டான். இடைவழியில் நடுக்கடலில் புயலடித்துக் கப்பல் உடைந்துவிட, மற்றவர் மூழ்கி இறந்தனர். மகாஜனகன் முயற்சியை விடாமல் கையினால் கடலை நீந்திக் கொண்டிருந்தான். ஏழாம் நாள், மணிமேகலை அவன் முன்தோன்றி 'இப்பெரிய கடலைக் கையினால் நீந்திக் கடக்க முடியுமா?' என்று கேட்க, 'கரை சேர்வது கூடுமா கூடாதா என்பது பற்றி கவலையில்லை; ஆனால் முயற்சி செய்ய வேண்டுவது என் கடமையல்லவா?' என்று விடையிறுத்தான்.  இவனது ஊக்கத்தை மெச்சிய மணிமேகலை, இவன் செய்துள்ள நற்கருமங்களுக்காக இவனது இடுக்கணைத் தீர்க்கக் கருதி, தான் யார் என்பதை அவனுக்குத் தெரிவித்து, அவன் போக நினைத்த இடம் யாது எனக் கேட்டது. மகாஜனகன்  தான் மிதிலை நகரஞ் செல்ல விரும்புவதாகச் சொல்ல, மணிமேகலை, தாய் குழந்தையைத் தூக்குவது போல, அவனை இரு கையாலும் தூக்கிக் கொண்டு வானத்தில் எழுந்து பறந்து சென்று, மிதிலை நகரத்து மாஞ்சோலையில் விட்டுவிட்டுச் சென்றது.

    இதற்குள் மிதிலை நகரத்தை ஆண்ட பொலஜனகன் இறந்துவிட, அவனின் ஒரே மகளாகிய 'சீவாலி தேவி' என்பவளை மகாஜனகன் மணந்துகொண்டு அரசனானான். அவளை மணப்பதற்குமுன், ஆயிரம் வீரராலும் வளைக்க முடியாத வில்லை வளைத்தல் முதலியவற்றைச் செய்தான். பிறகு இவன் தன் பிள்ளைக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்றான்.

    பௌத்தக் கதைகள் அடங்கிய இரசவாகிளி என்னும் நூலிலும் 'பலக கண்டதின்னஸ்ஸ வத்து' என்னும் துண்டுப் பலகை கொடுத்தவன் கதையில், மணிமேகலை கடலில் ஒருவனைக் காப்பாற்றிய செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் இது:

    வறட்சிமிக்க வேனிற் காலத்தில், தென்னாட்டினின்றும் வடநாட்டிற்கு யாத்திரை சென்ற ஒருவன், நீர் வேட்கை கொண்டு எங்கும் நீர் கிடைக்காமல் வருந்தி, ஒரு மரநிழலில் அமர்ந்து, தன்னிடமிருந்த இரண்டு வெற்றிலைகளையாவது மென்று சாற்றினை விழுங்கி, வேட்கை தீர்க்கலாம் என்று எண்ணினான். அவ்வமயம் அவனைப் போலவே வடநாட்டினின்று தென்னாட்டிற்கு யாத்திரை வரும் ஒருவன், நீர் வேட்கை மிக்கவனாய், பருக நீர் கிடைக்காமல் வருந்தி, அதே மரத்தடியில் வந்து அமர்ந்தான். வந்தவன் முன்னவனைப்பார்த்து, 'ஐயா, எனது நீர் வேட்கை தீர ஒரு வெற்றிலையாவது கொடும்,' என்று இரந்து வேண்டினான். அதற்கு அவன், 'எனக்கும் நீர் வேட்கை மிகுதியாயிருக்கின்றது. என்னிடமுள்ளது இரண்டு வெற்றிலைகளே; ஒன்றை உமக்குக் கொடுத்துவிட்டு யான் என்ன செய்வது?' என்று சொல்லி மறுத்தான். பின்னவன், 'என்னிடம் காசு இருக்கிறது; தருகிறேன்; ஒரு வெற்றிலை தாரும்' என்று கேட்க, அதற்கும் அவன் மறுத்தான். பின்னர், பெருந்தொகை கொடுப்பதாகச் சொன்னபோது, அவன் அப்பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு வெற்றிலையைக் கொடுத்தான். இருவரும் ஒவ்வொரு வெற்றிலையை மென்று ஒருவாறு நீர்வேட்கையைத் தீர்த்துக் கொண்டனர்.

    பின்னர், இருவரும் புறப்பட்டு வெவ்வேறு வழியே சென்று, கடைசியாக ஒரு துறைமுகத்தை அடைந்து, மரக்கலம் ஏறிக் கப்பல் யாத்திரை புறப்பட்டனர். ஆனால், அக்கப்பலில் இருவரும் ஒருங்கே யாத்திரை செய்வது அவர்களுக்குத் தெரியாது. சில நாள் சென்றபின், நடுக்கடலில் புயல் அடிக்க, மரக்கலம் உடைந்துவிட்டது. கப்பல் யாத்திரிகரில் சிலர் மூழ்கி இறந்தனர். சிலர் தம் உயிரைக் காக்கக் கடலில் நீந்திக் கொண்டிருந்தனர். அவ்வாறு நீந்தியவர்களில் வெற்றிலையைப் பெரும் பொருள் கொடுத்து வாங்கியவன் ஒரு மரப்பலகையைப் பற்றிக்கொண்டு அதன் உதவியினால் நீந்திக் கொண்டிருந்தான். வெற்றிலையை விற்றவனோ யாதொரு பற்றுக்கோடுமின்றி அப்பெருங்கடலினைத் தன் வெறுங்கைகளால் நீந்தித் தவித்துக் கொண்டிருந்தான். அப்போது பலகையுள்ளவன் அவனைக் கண்டு, பெருந்தொகை பெற்றுக்கொண்ட போதிலும், தக்க நேரத்தில் ஒரு வெற்றிலையையாவது கொடுத்து உதவி செய்த அவனது நன்றியை நினைவுகூர்ந்து, தன்னிடமிருந்த ஒரே மரப்பலகையை அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வெறுங்கைகளால் நீந்தத் தொடங்கினான்.

    அப்போது மணிமேகலை இவனது இரக்கமுள்ள மனப்பான்மையினையும் தன்னலமற்ற உதவியையுங் கண்டு மெச்சி, இத்தகைய நன்மகனைக் காப்பாற்ற வேண்டுவது தனது நீங்காக்கடமை எனக்கண்டு, அவன் மீது அருள் கூர்ந்து, அவன் கண்களுக்குத் தோன்றாமலே அவனை ஒரு கரையிற் கொண்டு போய்விட்டது. பின்னர், நெடுநேரஞ் சென்று, தனக்குக் கிடைத்த மரப்பலகையின் உதவியினால் மற்றவன் கடலை நீந்தி அதே கரையையடைந்தான். அடைந்தவன், தனக்கு முன்பே தன் நண்பன் வந்திருப்பதைக் கண்டு வியப்புற்று, 'ஐயா, வெறுங்கையினால் இப்பெருங்கடலை நீந்தி எனக்கு முன்னரே எவ்வாறு வந்தீர்? பலகையுள்ள எனக்குக் கரைசேர இவ்வளவு நேரம் சென்றதே! கையினால் கடலை நீந்தியதோடு, களைப்பின்றியும் காணப்படுகின்றீரே!' என்று வினவினான். அதற்கு மற்றவன், 'நான் இங்கு வந்த விதம் எனக்குத் தெரியாது,' என்று சொன்னான். அப்போது, அதுவரையில் அவர் கண்களுக்குப் புலப்படாதிருந்த மணிமேகலா தெய்வம் அவர் கண்முன்னர்த் தோன்றி, 'நானே உன்னை இங்குக் கொண்டு வந்தேன். பெற்றோரைப் பேணி ஒழுகுகின்றவர்களையும், புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணிகளைச் சரணடைந்து ஒழுகுகின்றவர்களையும், பஞ்சசீலம், அஷ்டாங்க சீலம், பிரதிமோக்ஷ சம்வரசீலம் என்னும் சீலங்களை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்களையும், மெய் மொழி மனங்களால் பிறருக்கு நன்மை செய்கின்றவர்களையும், செய்ந்நன்றி அறிந்து உதவி செய்கின்றவர்களையும் துன்பத்திலிருந்து தேவர்கள் காப்பாற்றுவார்கள்' என்று சொல்லிற்று.

    இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் பலகை கொடுத்துதவியவன், 'தாங்கள் சொல்லிய தர்மங்களில் ஒன்றையேனும் நான் செய்தவனல்லவே! அப்படியிருக்க, என்னைக் கடலினின்றுங் காப்பாற்றிய வகை என்ன?' என்று வியப்புடன் வினாவினான். அதற்கு அத்தெய்வம், 'உனக்கு ஒரு வெற்றிலை கொடுத்து உதவிய நன்றியை  நினைத்து, நடுக்கடலில் உன் உயிரையும் பாராமல் மற்றவனுக்கு உன் பலகையைக் கொடுத்து உதவினாய். இந்த நன்றியறிதல் என்னும் உனது நற்குணத்துக்காக உன்னை நான் காப்பாற்றினேன்' என்று சொல்லி, அக்கடற்றெய்வம் மறைந்து விட்டது.

    கம்போடியா தேசத்திலும் சீயாம் தேசத்திலும் மணிமேகலையைப் பற்றிய கதைகள் வழங்குகின்றனவென்று திரு. 'சில்வன் லீவி' (Silvain Levi) என்னும் ஆசிரியர் எழுதியிருக்கின்றார். அதன் சுருக்கம் இதுவாகும்:

    கம்போடியா தேசத்து இராமாயணத்தில் கீழ்கண்ட பகுதி காணப்படுகின்றது. தேவர்களும் தெய்வமகளிரும் ஓர் அரங்கத்தில் கூட நடனம் செய்கிற வழக்கப்படி, அரங்கத்தில் ஒருநாள் தேவர்கள் கூடியிருந்தார்கள். அக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள மணிமேகலா தெய்வம் தனது ஒளிவீசும் அணிகளை அணிந்து, கையில் மாணிக்கக் கல் ஒன்றனை எடுத்துக் கொண்டு சென்றது. செல்லும் வழியில் 'ராமசூரன்', அல்லது 'ராம பரசு' என்னும் பெயருள்ள அசுரன் அவள் கையில் உள்ள ஒளிவீசும் மாணிக்கக் கல்லைப் பிடுங்கிக்கொள்ள விரும்பி அவளைத் தொடர்ந்தான். அதனை அறிந்த மணிமேகலை மேகத்தில் மறைந்தொளிந்தாள். அசுரன் அங்கும் அவளைத் தொடர அவள் தன் கையிலிருந்த மாணிக்க நகையை அவன் கண்முன் காட்ட அதன் ஒளியினால் கண்கூசி, அவ்வரக்கன் திகைத்து நின்றான். அப்போது மணிமேகலை அவனிடமிருந்து தப்பி ஓடினாள். அவ்வமயம் தெய்வங்களின் அரங்கத்திற்குச் செல்லுவதற்காகப் போய்க்கொண்டிருந்த வீரமிக்க 'வர்ஜூன்' என்னும் தேவன், ராமபரசு என்னும் அசுரன் மணிமேகலையைத் துரத்துவது கண்டு, அவ்விடம் வர, அவனுக்கும் ராமசூரனுக்கும் பெரும் போர் நடந்து, கடைசியில் வர்ஜூன் என்பனை ராமசூரன் தன் பரசு என்னும் ஆயுத்திதினால் கொன்று வென்றான். இந்தக் கதை கம்போடியா தேசத்து அரண்மனையில் நாடகமாக நடிக்கப்பட்டு வருகின்றது.

    சயாம் தேசத்து இராமாயணத்திலும் இதே கதை கூறப்பட்டிருக்கின்றது. கி.பி 1783 முதல் 1809 வரையில் அரசாண்ட சயாம் தேசத்து அரசன், 'முதலாவது ராமன்' என்பவன் காலத்தில், இந்த இராமாயணம் எழுதப்பட்டது. இதுவும் கம்போடியா தேசத்து இராமாயணம் போன்றதே. இதில் காணப்படும் சிறு  மாறுபாடு என்னவென்றால், 'வர்ஜூன்' என்னும் தேவன் பெயர் 'அர்ஜூனன்' என்று காணப்படுவதுதான். கம்போடியா, சயாம் தேசத்துக் கதைகளும் மணிமேகலை சமுத்திரத்தில் வாழ்வதாகவும் அது கடற்தெய்வம் என்பதாகவும் கூறுகின்றன.

    'ச-கேச-தாது வம்சம்' என்னும் (Cha-Kesa-Dhatuvamsa) பிற்காலத்துப் பாலிமொழிப் பௌத்த நூலில், புத்தர் தமது ஆறு சீடர்களுக்கு ஆறு உரோம தாது கொடுத்ததாகவும், அவர்கள் அவற்றைக் கொண்டு தென்னாட்டிற்கு வந்தபோது, கடலால் சூழப்பட்ட ஓர் அசோக வனத்துக்கு வந்ததாகவும், அப்போது அந்தத் தாதுவை வைக்கத் தூபி கட்டுவோரைக் காணாமல் அச்சீடர்கள் வருந்த, புத்தர் கட்டளையினால் மணிமேகலா தெய்வம் அவர்களுக்குத் தோன்றி, ஒரு தூபியைக் கட்டியதாகவும் காணலாம். (மணிமேகலை 'பாசாத' என்னும் பெயருள்ள பௌத்தப் பள்ளி ஒன்று இலங்கையில் இருந்த தென்பதும், அதனை 'இரண்டாவது சேனன்' என்னும் அரசன் பிற்காலத்தில் பழுதுபார்த்துப் புதுப்பித்தான் என்பதும் தெரிகின்றன. இந்தப் பள்ளி மணிமேகலை கட்டியதாகக் கூறபடும் தூபி அன்றென்பது உறுதி.)

    இலங்கையில் சிங்களவர் வழங்கும் கதை சிலவற்றிலும் மணிமேகலையைப் பற்றிய குறிப்புகள் காணபடுகின்றன. அவற்றையெல்லாம் இங்கு எழுதவேண்டுவதில்லை. ஆனால், அக்கதைகள் ஒன்றில் தமிழருக்கு வியப்பைத் தருவன எவையென்றால், 'பாலங்கா' என்பவன் தன் மனைவி 'பத்தினி' என்பளுடன் மதுரைக்குச் செல்லும் வழியில் 'வைத' என்னும் ஆறு குறுக்கிட்டதால், பத்தினி தன் விரலில் அணிந்திருந்த ஆழியைக் கழற்றி ஆற்றில் எறிய, அந்த ஆற்றுநீர் விலகி இவர்களுக்கு வழிவிட்டது என்பதும், அக்கரையையடைந்த பின்னர், மணிமேகலா தெய்வம் வந்து ஆற்றில் எறியப்பட்ட மோதிரத்தை எடுத்து பத்தினியிடம் கொடுத்தது என்பதுவுமே. இங்கே பாலங்கா என்பவன் கோவலன்; பத்தினி என்பவள் கண்னகி: வைத என்பது வைகை ஆறு.

    சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு தமிழ்க் காவியங்களிலும் மணிமேகலா தெய்வத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கடலில் கப்பலோட்டி வாணிகம் செய்த கோவலனுடைய குலதெய்வமாக இருந்தது மணிமேகலா தெய்வம் என்றும், கோவலனுடைய மூதாதையார் ஒருவர் வாணிகத்தின் பொருட்டுக் கடலில் கப்பலேறிச்சென்றபோது, நள்ளிருளில் கப்பல் கவிழ்ந்து துன்புற்றபோது, அத்தெய்வம் அவரைக் காப்பாற்றியதென்றும், அந்நன்றியை மறவாமல் கோவலன் தன் மகளுக்கு அத்தெய்வத்தின் பெயரையே சூட்டினான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது; (சிலம்பு, அடைக்கலக் காதை 21-39) கோவலன் மகள் மணிமேகலைக்கு, உதயகுமரனால் நேர இருந்த இடையூறுகளை மணிமேகலா தெய்வம் நீக்கிய செய்தி மணிமேகலை நூலினால் அறியப்படும். காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இந்திரவிழாவை, ஓர் ஆண்டு, சோழமன்னன் நடைபெறாமல் நிறுத்திய காரணத்திற்காக மணிமேகலா தெய்வம் கோபங்கொண்டு சபிக்க, அவ்வூர் வெள்ளத்தினால் அழிந்தது என்று நூலினால் அறியப்படுகிறது. இத்தெய்வத்தைக் கடல் காவலுக்காக இந்திரன் நிறுவினான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

    (மணிமேகலைத் தெய்வத்தின் படம் சயாம் தேசத்து அரசரின் அரண்மனையில் இருக்கிறது.)

2. தரைக்காவல் தெய்வம் சம்பாபதி

    சாதுர் மாகராஜிக லோகம் என்னும் தெய்வலோகத்தில் உள்ள நான்கு தேவர்கள், நிலவுலகத்திலே நல்லவர்களுக்கு நேரிடுகிற துன்பங்கங்களைப் போக்கச் சில தெய்வங்களை நிறுவினார்கள் என்பது பௌத்தர்கள் நம்பிக்கை. அவ்வாறு நிறுவப்பட்ட தெய்வங்களுள் மணிமேகலை என்பது ஒன்றென்றும், இத்தெய்வம் கடலில் மரக்கலத்தில் செல்வோருக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்கி அவர்களைக் காப்பாற்றியது என்று மேலே விளக்கினோம். தரையில், நல்லவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்க, அத்தேவர்கள் சம்பாபதி என்னும் தெய்வத்தை நிறுவினார்கள் என்று கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால், சம்பாபதி என்னும் தெய்வத்தைக் கோதமை என்பவள் இவ்வாறு போற்றியதாக மணிமேகலை நூல் கூறுகிறது.

    "துறையும் மன்றமும் தொல்வலி மரனும்
    உறையுளும் கோட்டமும் காப்பாய், காவாய்!"
                                            (மணி 9-ஆம் காதை)

    "நாவலோங்கிய மாபெருந் தீவினுள், காவல் தெய்வம்" என்று சம்பாபதி கூறப்படுகிறபடியினாலே, இத்தெய்வம் நாவலந் தீவு (இந்தியா தேசம்) முழுமைக்கும் காவல் தெய்வமாக அமைந்திருந்தது. இமயமலையினின்று இத்தெய்வம் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், நாவல் மரத்தின் கீழ்த் தங்கி அரக்கரால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்க இத்தெய்வம் தவம் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

    "இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
    விளங்கொளி மேனி விரிசடை யாட்டி
    பொன் திகழ் நெடுவரை யுச்சித் தோன்றித்
    தென்றிசைப் பெயர்ந்த இத்தீவத் தெய்வதம்
    சாகைச் சம்பு தன்கீழ் நின்று
    மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
    வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற
    சம்பு என்பாள் சம்பா பதியினள்."
                                         (மணி பதிகம் 1-8)

    சம்பாபதி தெய்வம், முந்தை முதல்வி, முதுமூதாட்டி, தொன்மூதாட்டி, முதியாள், அருந்தவமிதியோள் என்றும்; சம்பு, கன்னி, குமரி என்றும் மணிமேகலை நூலில் கூறப்படுகிறது. இத்தெய்வத்தின் கோயில் குச்சரக்குடிகை எனப் பெயர் கொண்டிருந்ததென்றும், இக்கோயில் காவிரிப் பூம்பட்டினத்தில் இடுகாட்டிற்கு அருகில்  இருந்ததென்றும் அந்நூல் கூறுகிறது.

    இத்தெய்வத்தைப் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. சார்ங்கலன் என்னும் பார்ப்பனச் சிறுவன், தன்னந் தனியனாய்ச் சுடுகாட்டிற்குச் செல்ல, அங்கு ஒரு பேய்மகள் பிணத்தின் தலையொன்றினைக் கையிலேந்திக் கூத்தாடியதைக் கண்டு அஞ்சி நடுங்கினான். அவ்வச்சம் நீங்காமல் அவன், வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி அச்சத்தினாலே உயிர்விட்டான். அவனுடைய தாய் கோதமை என்பவள், ஆறாத் துயரத்துடன், அவனது உடலைத் தோளில் தூக்கிக் கொண்டு சம்பாபதி கோயிலுக்கு வந்து, அவனை உயிர்பித்துக் கொடுக்கும்படி வரம் வேண்டினாள். சம்பாபதி தெய்வம் அவள்முன் தோன்றி, "அவன் விதிவசத்தினால் இறந்தானேயன்றி அவனைப் பேய் கொல்லவில்லை. அவன் ஆயுள் அவ்வளவுதான். இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் எனக்குக் கிடையாது" என்று கூறியது. இதனைக் கேட்ட கோதமை மனம் வருந்தி, "தெய்வங்கள் கேட்ட வரத்தைக் கொடுக்கும் என்று உலகோர் கூறுகிறார்கள். உனக்கு இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் இல்லை என்று கூறுவது என்னை?" என்று வினவினாள். அப்போது சம்பாபதி தெய்வம், அவள் முன்பாக, சக்கரவாளங்களிலுள்ள எல்லாத் தெய்வங்களையும் தனது தெய்வ ஆற்றலினால் வரவழைத்து, "இவர்களில் யாரேனும் இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஆற்றல் உடையவராயிருந்தால், நானும் உன் மகனை உயிர்ப்பித்துக் கொடுப்பேன்" என்று கோதமைக்குக் கூறியது. வந்த தெய்வங்கள் எல்லாம், 'தமக்கு அத்தகைய ஆற்றல் இல்லை' என்று கூறின. அதனால் மனம் தெளிந்த கோதமை, தன் இறந்த மகனது உடலைச் சுடலையில் அடக்கம் செய்து சென்றாள். இக்கதை மணிமேகலை (6-ஆம் காதை) யில் கூறப்பட்டுள்ளது.

    சாயாவனம் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலின் தென்பக்கத்தில் சம்பாபதி கோயில் ஒன்று இப்போதும்  இருக்கிறதென்றும், இக்கோயில் சம்பாபதியம்மன்  தெய்வம்  என்றும், பிடாரி கோயில் என்றும் வழங்கப்படுகிறதென்றும் கூறுவர் டாக்டர் சுவாமிநாத ஐயர் அவர்கள். (மணி. அரும்பத அகராதி)

    பிடாரி என்பது பீடையை (துன்பத்தை) அரிப்பவள் (போக்குபவள்) என்று பொருள்படும். சம்பாபதி அம்மன், உலகில் உள்ள நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்குகிறவள் ஆதலின், பிடாரி என்று கூறப்படுகிறாள் போலும்.

    சீர்காழி இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கே 14 மைல் தூரத்தில் உள்ள காவிரிப்பூம்பட்டினம் (இப்போது சிறுகிராமமாக) இருக்கிறதென்றும், இங்குள்ள மருவத்தூர் கிராமம் என்னும் இடத்தில், சம்பாபதி கோயில் இருக்கிறதென்றும், இங்குள்ள பல்லவனேச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கருகில் இரண்டு மண்மேடுகளும், சம்பாபதி கோயிலுக்கருகில் இரண்டு மண்மேடுகளும் காணப்படுகின்றன என்றும் ஆர்க்கியாலஜி இலாகா அறிக்கை கூறுகிறது.

    இவ்வறிக்கையில் கூறப்படுகிற மருவத்தூர் கிராமம் என்பது சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற  காவிரிப்பூம்பட்டினத்தின் மருவூர்ப்பாக்கமாக இருக்கக்கூடுமோ? இவ்வறிக்கையில் கூறப்படுகிற மேடுகளை அகழ்ந்து பார்த்தால், தமிழ்நாட்டுச் சரித்திர சம்பந்தமான பழைய பொருள்கள் ஏதேனும் கிடைக்கக்கூடும்.

3. கந்திற் பாவை

    காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த குச்சரக்குடிகை என்னும் பெயருள்ள சம்பாபதி கோயிலிலே ஒரு தூணில் கந்திற்பாவை என்னும் தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. (கந்து - தூண், பாவை - பதுமை) இவை இரட்டைத் தெய்வங்களின் உருவங்கள். துவதிகன், ஓவியச்சேனன் (சித்திரச்சேனன்) என்னும் பெயருடையவை. இவையும் பௌத்தர்களால் போற்றப்பட்ட சிறு தெய்வங்களாம்.  இத்தெய்வங்கள் முக்கால நிகழ்ச்சிகளை அவ்வப்போது, தம்மை வழிபடுவோருக்குக் கூறிவந்தன என்று மணிமேகலை நூலினால் அறிகிறோம்.

4. சாதுர் மகாராஜிகர்
    உலகத்தின் நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்கள் காவலாக நிறுத்தப்பட்டனர். அவர்களுக்குச் சதுர் மகாராஜிகர் என்பது பொதுப் பெயர். உலகத்திலே மனிதர் செய்கிற நன்மை தீமைகளை அறிந்து அவற்றை அவ்வப்போது இந்திரனுக்குத் தெரிவிக்கவேண்டியது இவர்கள் கடமை. இவர்களைத் திசைக் காவலராக நியமித்தவன் இந்திரனே. இவர்களின் பெயர் வருமாறு;

    திருதராட்டிரன்: இவன் கிழக்குத் திசைக்குத் தெய்வம். இவன் கந்தவர்களுக்கு அரசன்.
    விருதாட்சன்: இவன் தெற்குத் திசைக்குத் தெய்வம். இவன் கும்பாண்டர்களுக்கு அரசன்.
    விருளாட்சன்: இவன் மேற்குத் திசைக்குத் தெய்வம். இவன் இயக்கருக்கு அரசன்.
    வைசிரவணன்: இவன் வடக்குத் திசைக்குத் தெய்வம். இவன் நாகர்களுக்கு அரசன்.

    இந்த நான்கு தெய்வங்களும் சக்கனுக்கு (இந்திரனுக்கு) அடக்கமானவர்கள் என்பதும், உலகத்திலே நான்கு திசைகளிலும் நிகழ்கிற எல்லாச் செய்திகளையும் இவர்கள் அவ்வப்போது இந்திரனுக்குத் தெரிவிக்கிறார்கள் என்பதும் பௌத்தர்களின் நம்பிக்கை.

5. சக்கன்

    சக்கன் என்னும் சக்கரன் விண்ணுலகத்துக்கு அரசன். இவனை இந்திரன் என்றும் கூறலாம். இவன் பௌத்தச் சிறு தெய்வங்களுக்கெல்லாம் தலைவன். இவன் பௌத்த தர்மப்படி நடக்கிற நல்லவர்களுக்கு உதவி செய்கிறான் என்பது பௌத்தர்களின் நம்பிக்கை. இவன், விண்ணுலகத்திலே சிம்மாசனத்தின் மேல் விரிக்கப்பட்ட பாண்டு கம்பளத்தின்மேல் அமர்ந்திருக்கிறான் என்றும், ஏதேனும் சிறப்பான நிகழ்ச்சிகள் உலகத்தில் நிகழுமானால் இவனுடைய பாண்டு கம்பளம் சூடுகொள்ளும் என்றும், அப்போது இவன் அந்நிகழ்ச்சிகளை அறிந்துகொள்கிறான் என்றும் பௌத்தர்கள் நம்புகிறார்கள்.  இந்திரனைப் பற்றிய பல கதைகள் பௌத்த நூல்களிலே கூறப்படுகின்றன. இந்தச் சக்கனாகிய இந்திரன் வேறு; வைதீக மதத்தில் கூறப்படுகிற இந்திரன் வேறு.

6. அவலோகிதர்

    பௌத்தரால் வணங்கப்படும் தெய்வங்களில் அவலோகிதரும் ஒருவர். இவர் மேலே கூறப்பட்ட தெய்வங்களுக்கு மேற்பட்டவர். ஆனால், புத்தருக்குக் கீழ்ப்பட்டவர். இவருக்கு உலகநாதர் என்றும் போதிசத்துவர் என்றும் பெயர் உண்டு. துஷிதலோகத்திலே இவர் இருக்கிறார். அறநெறியைப் பூவுலகத்தில் போதிப்பதற்காகப் புத்தராகப் பிறக்கிறவர் இவரே.

        "அறிவு வறிதா யுயிர்நிறை காலத்து
        முடி தயங் கமரர்  முறைமுறை யிரப்பத்
        துடித லோக மொழியத் தோன்றித்
        போதி மூலம் பொருந்தி யிருந்து
        மாரனை வென்று வீர னாகிக்
        குற்றம் மூன்றும் முற்ற வறுக்கும்
        வாமன் வாய்மை யேமக் கட்டுரை
        யிறந்த காலத் தெண்ணில் புத்தர்களும்"

என்று மணிமேகலை கூறுவது காண்க.

    இந்த அவலோகிதர் இடத்திலே அகத்திய முனிவர் தமிழ்மொழியைக் கற்றார் என்பது தமிழ்நாட்டுப் பௌத்தர்களின் நம்பிக்கை. வீரசோழிய நூலாசிரியராகிய புத்தமித்திரர் இதனைக் கூறுகிறார்.

"ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன்கேட்
        டேயும் புவனிக் கியம்பிய தண்டமிழ் ..."

என்று அவர் கூறுகிறார்.

    அவலோகிதரைப் பௌத்தர்கள் வணங்குகிறார்கள். தமிழ்நாட்டிலும் பௌத்தமதம் பரவியிருந்த காலத்தில் அவலோகிதர் உருவ வழிபாடு நடந்து வந்தது.  நாகைப்பட்டினத்தில் இருந்து கிடைத்த அவலோகிதரின் செம்பு உருவங்களைச் சென்னைக் காட்சிச் சாலையில் இன்றும் காணலாம்.

பின்னிணைப்பு -2

பின்னிணைப்பு
2. சாத்தனார் - ஐயனார்

    'சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது  'அமரகோசம்', 'நாமலிங்கானுசாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, 'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அஃதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ்நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்'  என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரிகின்றது. பௌத்த நூலாகிய 'மணிமேகலை' யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் 'சாத்தனார்' என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. மற்றும், 'பெருந்தலைச் சாத்தனார்', 'மோசி சாத்தனார்' , 'வடவண்ணக்கன் பெருஞ் சாத்தனார்', 'ஒக்கூர்மாசாத்தனார்', 'கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார்' முதலான சங்ககாலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக் கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த 'சாத்தன்' என்னும் பெயரைக் கொண்டு கருதலாம்.

    கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோவில்களுக்குச் 'சாஸ்தாவு குடி' என்றும், 'சாஸ்தா வேஸுவரம்'  என்றும், 'சாஸ்த்தாவுகள' என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவை யாவும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்தமதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுவது இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்குச் 'சாத்தன் காவுகள்' என்று பெயர். (காவு-கா- தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்.) பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு 'ஆராமம்' (பூந்தோட்டம்) என்று  பெயர் வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள  சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தவை, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்சிவல்லோர் கருத்து. சாத்தனாருக்கு 'ஐயப்பன்' என்னும் பெயரும் மாலையாள தேசத்தில் வழங்கிவருகின்றது. காவிரிப்பூம் பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. 'சாஸ்தா' அல்லது ;சாத்தன்' என்னும் வடசொல்லிற்கு நேரான தமிழ்சொல் 'ஐயன்' அல்லது 'ஐயனார்' என்பது. 'ஐயன்' என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்தமதம் அழிந்த பின்னர், அம் மதக்கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்துமதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனராரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகக் சேர்த்துக்கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.

    'பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
    சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
    கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதய நல்ல
    தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்ரனாரே.'

என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.

    பிற்காலத்தில், 'சாத்தனார்','ஐயனார்','அரிஹரபுத்திரர்' என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாய்ச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர்.

    'சாத்தன்' அல்லது 'சாஸ்தா' என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப்பற்றியதாகும். சிலப்பதிகாரம், கனாத்திறமுரைத்த காதையில், 'பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு' என வரும் அடியில், 'பாசண்டச் சாத்தன்' என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு: "பாசண்டம் தொண்ணூற் றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை; இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாதலின், 'மகாசாத்திர' னென்பது அவனுக்குப் பெயராயிற்று." இவர் கூறும் உரைக் கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, 'சூடாமணி நிகண்டும்,'

    'அண்ணலே மாயா தேவி சுதன்அக ளங்க மூர்த்தி
    தண்ணிய கலைகட் கெல்லாம் நாதன்முக் குற்ற மில்லோன்'

என்று கூறுகின்றது. 'அருங்கலை நாயகன்' என்று திவாகரம் கூறுகின்றது. நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், 'ஸ்வஸ்தீ ஸ்ரீஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்', என்று எழுதியிருப்பது காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் 'சாஸ்தா' அல்லது 'மகா சாஸ்தா' என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும். 'லலிதாவிஸ்தார' என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பல கலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண்கூடான சான்று யாதெனில், காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிரகாரத்தில் இருந்த புத்தர் உருவச்சிலைக்குச் 'சாஸ்தா' என்னும் பெயர் உள்ளதுதான். இச்சாஸ்தாவைப்பற்றிக் 'காமாட்சி லீலாப்பிரபாவம்' என்னும் காமாக்ஷி விலாசத்தில், 'காமக் கோட்டப்பிரபாவத்தில்,' 'தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து(முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம், காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது. 'சாஸ்தா' என்பவரும் 'புத்தர்' என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம்.

    காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில்  இருந்த சாத்தன் (புத்தன்) உருவத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பு கோபி நாதராயர் அவர்கள் கண்டுபிடித்து அதைப் படம்பிடித்து வெளியிட்டார்கள். (Indian Antiquary Vol. XLIV) அந்த உருவத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு கச்சிக்காம கோட்டத்தில் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அது சுமார் ஐந்தடி உயரமுள்ள கருங்கற் சிலையுருவம். புத்தர் பெருமான் நின்ற வண்ணம் உபதேசம் செய்வதுபோல அமைந்துள்ளது. இந்தச் சாஸ்தாவின் (புத்தரின்) கையிலிருந்து பெற்ற செண்டு என்னும் ஆயுதத்தினால் கரிகாலன் என்னும் சோழ அரசன் மேருமலையை அடித்தான் என்று ஒரு கதையுண்டு.

    "கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்
    மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
    கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
    செம்பொற் கிரிதிரித்த செண்டு"

என்னும் பழைய செய்யுள் இதனைக் கூறுகிறது. இச்செய்யுள் அடியார்க்கு நல்லாரால் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டப்பட்டது. இவ்வளவு புகழ்வாய்ந்த காமகோட்டத்துப் புத்தர் உருவச்சிலையை, இப்போது சென்னை அரசாங்க பொருட்காட்சிச் சாலையில் கொண்டுபோய்  வைத்துவிட்டு, அஃது இருந்த இடத்தில் ஐயப்பன் உருவத்தைப் புத்தம்புதிதாகச் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த உருவம், இரண்டு கைகளையும் கால் முட்டியின் மேல் தாங்கி உட்கார்ந்திருப்பது போல இருக்கிறது. மலையாளத்திலுள்ள சாத்தன் காவுகளிலிருந்து புத்த விக்கிரங்களும் எடுக்கப்பட்டு இது போன்ற ஐயனார் உருவங்களை வைத்தார்கள் போலும்.

    'சாஸ்தா' என்னும் புத்தருடைய கோயில்களை 'ஐயனார் கோயில்கள்' என்றும், 'சாதவாகனன் கோயில்கள்' என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச்செய்துவிட்டது போலவே ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாக தெரிகிறது, சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர். தென்னாட்டில், 'தலைவெட்டிய முனீஸ்வரன்' கோயில் என ஒன்று உண்டென்றும், அக் கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம் போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது. இப்போது காணப்படும் 'தருமராஜா கோயில்கள்' என்பனவும் பண்டொரு காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. 'தருமன்' அல்லது 'தருமராசன்' என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று. பிங்கல நிகண்டில் 'தருமன்' என்றும் திவாகரத்திலும் நாமலிங்கானு சாசனத்திலும் 'தர்மராஜன்' என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும். இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்த கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜா கோயில்களில் பௌத்தர் போற்றும் 'போதி' என்னும் அரசமரங்கள் இன்றைக்கும் காணப்படுவது தருமராஜா கோயில்கள் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் 'தரும ராஜா', அல்லது 'தருமதாகூர்' என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம். எனவே. தமிழ்நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று கருதப்படும்.

    இவ்வாறே, தாராதேவி, மங்கலதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது, 'தருமராஜா' என்னும்  பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, 'தாராதேவி' என்னும் பௌத்த அம்மன் கொயில், தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதியின் கோயிலாக்கப்பட்டது,

    சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் 'வரதராசர் கோயில்;. 'திருவரங்கர் கோயில்','வேங்கடேசர் கோயில்' முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் 'கபாலீஸ்வரர் கோயில்', 'தியாகராசர் கோயில்','சொக்கலிங்கர் கோயில்'  முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் 'தருமராஜா கோயில்', 'சாத்தனார் கோயில்','முனீஸ்வரர் கோயில்' என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டு வந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது அதை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமதத் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராமதேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகிறது.

பின்னிணைப்பு

பின்னிணைப்பு
1.புத்தர் தோத்திரப் பாக்கள்

வீரசோழிய உரை, நீலகேசி உரை முதலியவற்றில் புத்தரைப்பற்றிய பாடல்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துக் கீழே தருகிறோம். அவற்றின் சொல்லழகு பொருளழகுகளைச் சுவைத்து இன்புறுக:-


1. போதி, ஆதி பாதம், ஓது!

2. போதிநிழற் புனிதன் பொலங்கழல்
   ஆதி உலகிற் காண்!

3. மாதவா போதி வரதா வருளமலா
    பாதமே யோது சுரரைநீ -- தீதகல
    மாயா நெறியளிப்பாய் வாரன் பகலாய்ச்சீர்த்
    தாயா யலகிலரு டான்!

4. உடைய தானவர்
   உடைய வென்றவர்
   உடைய தாள்நம
   சரணம் ஆகுமே!

5. பொருந்து போதியில்
   இருந்த மாதவர்
   திருந்து சேவடி
   மருந்து ஆகுமே!

6. போதி நீழற்
    சோதி பாதம்
   காத லால்நின்
    றோதல் நன்றே!

7. அணிதங்கு போதி வாமன்
    பணிதங்கு பாதம் அல்லால்,
    துணிபொன் றிலாத தேவர்
    மணிதங்கு பாதம் மேவார்!

8. விண்ணவர் நாயகன் வேண்டக்
    கண்ணினி தளித்த காதற்
    புண்ணியன் இருந்த  போதி
    நண்ணிட் நோய்நலி யாவே!

9. மருள்அறுத்த பெரும்போதி மாதவரைக்
        கண்டிலனால்! - என்செய்கோ யான்!
   அருள் இருந்த திருமொழியால் அறவழக்கங்
         கேட்டிலனால்! - என்செய்கோ யான்!
   பொருள்அறியும் அருந்தவத்துப் புரவலரைக்
        கண்டிலனால்! - என்செய்கோ யான்!

10. தோடார் இலங்கு மலர்கோதி வண்டு
        வரிபாட நீடு துணர்சேர்
    வாடாத போதி நெறிநீழல் மேய
        வரதன் பயந்த அறநூல்
    கோடாத சீல விதமேவி வாய்மை
        குணனாக நாளும் முயல்வார்
    வீடாத இன்ப நெறிசேர்வர்! துன்ப
        வினைசேர்தல் நாளும் இலரே!

11. தொழும்அடியர் இதயமலர் ஒருபொழுதும் பிரிவரிய
            துணைவர் எனலாம்
    எழும்இரவி கிரணநிகர் இலகுதுகில் புனைசெய்தருள்
         இறைவர் இடமாம்
    குழுவுமறை யவருமுனி வரருமரி பிரமருர
        கவனும் எவரும்
    தொழுகைய இமையவரும் அறம்மருவு
        துதிசெய்தெழு துடித புரமே!


12 மணியிலகு செறிதளிரொ டலர் ஒளிய
        நிழல் அரசின் மருவி அறவோர்
    பிணிவிரவு துயரமொடு பிறவிகெட
        உரை அருளும் பெரிய அருளோன்
    துணியிலகு சுடருடைய அரசரொடு
        பிரமர்தொழு தலைமை யவர்மா
    அணியிலகு கமலமலர் அனையஎழில்
        அறிவனிணை அடிகள் தொழுவாம்!

13. எண்டிசையும் ஆகி இருள் அகலநூறி
        எழுதளிர்கள் சோதி முழுதுலகம் நாறி
    வண்டிசைகள் பாடி மதுமலர்கள் வேய்ந்து
        மழைமருவு போதி உழைநிழல்கொள் வாமன்
    வெண்டிரையின் மீது விரிகதிர்கள் காண
        வெறிதழல்கொள் மேனி அறிவனெழில் மேவு
    புண்டரிக பாதம் நமசரனம் ஆகும்
        எனமுனிவர் தீமை புணர்பிறவி காணார்!

14. கூர் ஆர் வளைஉகிர் வாள் எயிற்றுச் செங்கட்
        கொலை உழுவை காய்பசியால் கூர்ந்த வெந்நோய் நீங்க
    ஓர் ஆயிரங்கதிர்போல் வாள்விரிந்த மேனி
        உளம்விரும்பிச் சென்றாங் கியைந்தனை நீ என்றால்
    கார் ஆர் திரைமுளைத்த செம்பவளம் மேவும்
        கடிமுகிழ்த் தண்சினைய காமருபூம் போதி
    ஏர்ஆர் முனிவரர்கள் வானவர்தங் கோவே!
        எந்தாய்! அகோ! நின்னை ஏத்தாதார் யாரே!

15. மிக்கதனங் களைமாரி மூன்றும் செய்யும்
        வெங்களிற்றை மிகுசிந்தா மணியை மேனி
    ஒக்கஅரிந் தொருகூற்றை இரண்டு கண்ணை
        ஒளிதிகழும் திருமுடியை உடம்பில் ஊனை
    எக்கிவிழுங் குருதிதனை அரசு தன்னை
        இன்னுயிர்போல் தேவியைஈன் றெடுத்த செல்வ
    மக்களைவந் திரந்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும்
        வானவர்தாம் உறைந்தபதி மானா வூரே!

16. வான் ஆடும் பரியாயும் அரிண மாயும்
        வனக்கேழற் களிறாயும் எண்காற் புள்மான்
    தானாயும் பணை எருமை ஒருத்த லாயும்
        தடக்கை இளங் களிறாயும்  சடங்க மாயும்
    மீனாயும் முயலாயும் அன்ன மாயும்
        மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க
    மானாயும் கொலைகளவு கள்பொய் காமம்
        வரைந்தவர்தாம் உறைந்தபதி மானா வூரே!
                 (சடங்கம் - ஊர்க்குருவி)

17. பைங்கண்வாள் எயிற்றினைப் பகட்டெருத்தின் வள்உகிர்ப்
        பரூஉத்திரட் குரூஉக்கொடாட் பாலுடைச் சேனாவுடைச்
    சிங்கஏறு நான்குதாங்க மீதுயர்ந்த சேயொளிச்
        சித்திரங் குயிற்றிநூறு செம்பொனாசனத்தின்மேல்
    கொங்குநாறு போதுசிந்தி வானுளோர் இறைஞ்சிடக்
        கோதிலா அறம்பகர்ந் தமர்ந்தகோன் குளிர்நிழற்
    பொங்குதாது கொப்புளித்து வண்டுபாடு தேமலர்ப்
        போதிஎம் பிரான் அடிக்கண் போற்றின்வீட தாகுமே!

18. வீடுகொண்ட நல்அறம் பகர்ந்துமன் பதைக்கெலாம்
        விளங்குதிங்கள் நீர்மையால் விரிந்திலங்கும் அன்பினோன்
    மோடுகொண்ட வெண்நுரைக் கருங்கடற் செழுஞ்சுடர்
        முளைத்தெழுந்த தென்னலாய் முகிழ்ந்திலங்கு போதியின்
    ஆடுகின்ற மூவகைப் பவங்கடந்து குற்றமான
        ஐந்தொடங்கோர் மூன்றறுத்த நாதனாள் மலர்த்துணர்ப்
    பீடுகொண்ட வார்தளிப் பிறங்கு போதி யானைஎம்
        பிரானை நாளும் ஏத்துவார் பிறப்பிறப் பிலார்களே!

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா
(தரவு)

19. திருமேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக
    உருமேவி அவதரித்த உயிர் அனைத்தும் உயக்கொள்வான்
    இவ்வுலகும் கீழுலகும் மிசையுலகும் இருள்நீங்க
    எவ்வுலகும் தொழுதேத்த எழுந்தசெழுஞ் சுடர்என்ன
    விலங்குகதிர் ஓர் இரண்டு விளங்கிவலங் கொண்டுலவ
    அலங்குசினைப் போதிநிழல் அறம்அமர்ந்த பெரியோய் நீ!

(தாழிசை)
    மேருகிரி இரண்டாகும் எனப்பணைத்த இருபுயங்கள்
    மாரவனி தையர்வேட்டும் மன்னுபுரம் மறுத்தனையே!
    'வேண்டினர்க்கு வேண்டினவே அளிப்பனெ'ன மேலைநாள்
    பூண்டஅரு ளாள! நின் புகழ்புதிதாய்க் காட்டாதோ!
    உலகமிக மனந்தளர்வுற் றுயர்நெறியோர் நெறி அழுங்கப்
    புலவுநசைப் பெருஞ்சினத்துப் புலிக்குடம்பு கொடுத்தனையே!
    பூதலத்துள் எவ்வுயிர்க்கும் பொதுவாய் திருமேனி
    மாதவன் நீ என்பதற்கோர் மறுதலையாய்க் காட்டாதோ

    கழல் அடைந்த உலகனைத்தும் ஆயிரம்வாய்க் கடும்பாந்தள்
    அழல் அடைந்த பணத்திடை இட்டன்றுதலை ஏறினையே!
    மருள் பாரா வதம் ஒன்றே வாழ்விக்கக் கருதியநின்
    அருள்பாரா வதஉயிர்கள் அனைத்திற்கும் ஒன்றாமோ!

(அராகம்)

    அருவினை சிலகெட ஒருபெரு நரகிடை
    எரிசுடர் மறைமலர் எனவிடும் அடியினை!
    அகலிடம் முழுவதும் அழல்கெட அமிழ் துமிழ்
    முகில்புரி இமிழ்இசை நிகர் தரும் மொழியினை!

(ஈரடி அம்போதரங்கம்)
    அன்பென்கோ! ஒப்புரவென்கோ! ஒருவன் அயில்கொண்டு
    முந்திவிழித் தெரியப்பால் பொழிந்தமுழுக் கருணையை!
    நாணென்கோ! நாகமென்கோ! நன்றில்லான் பூணுந்
    தீயினைப் பாய்படுத்த சிறுதுயில்கொண் டருளினை!

(ஓரடி அம்போதரங்கம்)
    கைந்நாகத் தார்க்காழி கைக்கொண் டளித்தனையே!
    பைந்நாகர் குலம் உய்ய வாய்அமிழ்தம் பகர்ந்தனையே!
    இரந்தேற்ற படைஅரக்கர்க் கிழிகுருதி பொழிந்தனையே!
    பரந்தேற்ற மற்றவர்க்குப் படருநெறி மொழிந்தனையே!

(தணிச்சொல்)

எனவாங்கு.

(சுரிதகம்)
    அருள்வீற் றிருந்த திருநிழற் போதி
    முழுதுணர் முனிவ! நிற் பரவுதும் தொழுதக
    ஒருமனம் எய்தி இருவினைப் பிணிவிட்டு
    முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந்
    தோங்குநீர் உலகிடை யாவரும்
    நீங்கா இன்பமொடு நீடுவாழ் கெனவே!

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)

    மண்வாழும் பல்லுயிரும் வானவரும் இமைவரும்
    கண்வாழும் மாநகர் கிளை அனைத்தும் களிகூர
    அந்தரதுந் துபிஇயங்க அமரர்கள் நடம்ஆட
    இந்திரர்பூ மழைபொழிய இமைவர்சா மரையிரட்ட
    முத்தநெடுங் குடைநிழற்கீழ் மூரியர சரியணைமேல்
    மெய்த்தவர்கள் போற்றிசைப்ப வீற்றிருந்த ஒரு பெரியோய்!

(தாழிசை)

    எறும்புகடை அயன்முதலா எண்ணிறந்த என்றுரைக்கப்
    பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி
    எவ்வுடம்பில் எவ்வுயிர்க்கும் யாதொன்றால் இடரெய்தின்
    அவ்வுடம்பின் உயிர்க்குயிராய் அருள்பொழியும்  திருவுள்ளம்
    அறங்கூறும் உலகனைத்தும் குளிர்வளர்க்கும் மழை முழக்கின்
    திறங்கூற வரைகதிரும் செழுங்ககலம் நனிநாண
    ஒருமைக்கண் ஈர்ஒன்பான் உரைவிரிப்ப உணர்பொருளால்
    அருமைக்கண் மலைவின்றி அடைந்ததுநின் திருவார்த்தை!
    இருட்பார வினைநீக்கி எவ்வுயிர்க்கும் காவலென
    அருட்பாரம் தனிசுமந்த அன்றுமுதல் இன்றளவும்
    மதுஒன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும்
    பொதுஅன்றி நினக்குரித்தோ புண்ணிய! நின் திருமேனி!

(பேரெண்)
    ஆருயிர்கள் அனைத்தினையும் காப்பதற்கே அருள் பூண்டாய்!
    ஓருயிர்க்கே உடம்பளித்தால் ஒப்புரவிங் கென்னாகும்!
    தாமநறுங் குழல்மழைக்கண் தளிரியலார் தம்முன்னர்க்
    காமனையே முனந்தொலைத்தால் கண்ணோட்டம் யாதாங்கொல்!

(சிற்றெண்)
    போர் அரக்கர் ஓர்ஐவர்க் கறவமிழ்தம் பொழிந்தனையே!
    ஆர் அமிழ்தம் மணிநாகர் குலம் உய்ய அருளினையே!
    வார்சிறைப்புள் அரையர்க்கும் வாய்மைநெறி பகர்ந்தனையே!
    பார்மிசை ஈரைந்தும் பாவின்றிப் பயிற்றினையே!

(இடையெண்)

    அருளாழி நயந்தோய் நீஇ!
    அறவாழி பயந்தோய் நீஇ!
    மருளாழி துறந்தோய் நீஇ!
    மறையாழி புரந்தோய் நீஇ!
    மாதவரில் மாதவன் நீஇ!
    வானவருள் வானவன் நீஇ!
    போதனரிற் போதனன் நீஇ!
    புண்ணியருட் புண்ணியன் நீஇ!

(அலவெண்)
    ஆதி நீஇ! அமலன் நீஇ!
    அயனும் நீ! அரியும் நீஇ!
    சோதி நீஇ! நாதன் நீஇ!
    துறைவன் நீஇ! இறைவன் நீஇ!
    அருளும் நீஇ! பொருளும் நீஇ!
    அறிவன் நீஇ!அநகன் நீஇ!
    தெருளும் நீஇ! திருவும் நீஇ!
    செறிவும் நீஇ! செம்மல் நீஇ!

(தனிச்சொல்)
எனவாங்கு.

(சுரிதகம்)
    பவளச் செழுஞ்சுடர் மரகதப் பாசடைப்
    பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும்
    போதியந் திருநிழற் புனித! நிற் பரவுதும்
    மேதகு நந்தி புரிமன்னர் சுந்தரச்
    சோழர் வண்மையும் வனப்புந்
    திண்மையும் உலகில் சிறந்துவாழ் கெனவே!


வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)

    பூமகனே முதலாகப் புரந்தோர் எண்திசையும்
    தூமலரால் அடிமலரைத் தொழுதிரந்து வினவியநாள்
    காமமுங் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்
    தீமைசால் கட்டுரைக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த
    நாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச்
    சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே!

(தாழிசை)
    தானமே முதலாகத் தசபாரம் நிறைந்தருளி
    ஊனமொன் றில்லாமை ஒழிவின்றி இயற்றினையே!
    எண்பத்தொன் பதுசித்தி இயல்பினால் உளஎன்று
    பண்பொத்த நுண்பொருளைப் பார்அறியப் பகர்ந்தனையே!
    துப்பியன்ற குணத்தோடு தொழில்களால் வேறுபட
    முப்பதன்மேல் இரண்டுகளை முறைமையால் மொழிந்தனையே!

(அராகம்)

    ஆதியும் இடையினோ டிறுதியும்அறிகுவ
    தமரரும் முனிவரும் அரிதுநின் நிலைமையை!
    மீதியல் கருடனை விடஅர வொடுபகை
    விதிமுறை கெடஅறம் வெளியுற அருளினை!
    தீதியல் புலியது பசிகெடு வகைநின
    திருஉரு அருளிய திறமலி பெருமையை!
    போதியின் நலமலி திருநிழ லதுநனி
    பொலிவுற அடியவர் இடர்கெட அருளினை!

(பேரெண்)

    திசைமுகன் மருவிய கமலநல் நிறமென
    வசைஅறு முனிவொடு மலியும் நின்அடி!
    உயர்வுறு பெருமையோ டயரறு மயர்வொடு
    புரைஅறு நலனொடு பொலியும் நின்புகழ்!

(சிற்றெண்)
    கற்புடை மாரனைக் காய்சினந் தவிர்த்தனை!
    பொற்புடை நாகர்தந் துயரம் போக்கினை!
    மீனுரு ஆகி மெய்ம்மையிற் படிந்தனை!
    மானுரு ஆகி வான்குணம் இயற்றினை!

(இடையெண்)
    எண்ணிறந்த குணத்தோய் நீஇ!
    யாவர்க்கும் அரியோய் நீஇ!
    உண்ணிறைந்த அருளோய் நீஇ!
    உயர்பார நிறைந்தோய் நீஇ!
    மெய்ப்பொருளை அறிந்தோய் நீஇ!
    மெய்யறம்இங் களித்தோய் நீஇ!
    செப்பரிய தவத்தோய் நீஇ!
    சேர்வார்க்குச் சார்வு நீஇ!

(அளவெண்)
    நன்மை நீஇ! தின்மை நீஇ!
    நனவும் நீஇ! கனவும் நீஇ!
    வன்மை நீஇ! மென்மை நீஇ!
    மதியும் நீஇ! விதியும் நீஇ!
    இம்மை நீஇ! மறுமை நீஇ!
    இரவும் நீஇ! பகலும் நீஇ!
    செம்மை நீஇ! கருமை நீஇ!
    சேர்வும் நீஇ! சார்வும் நீஇ!


(தனிச்சொல்)

எனவாங்கு.

(சுரிதகம்)

    அலகிலா நின்றன் அடிஇணை பரவுதும்
    வெல்படைத் தொண்டைமான் விறற்சேனாபதி
    சிங்களத் தரையன் வெண்குடை யதனொடு
    பொங்குபுகழ் வில்லவன்றன் புறக்கொடை கண்டு
    பொலிதரு சேந்தன் பொன்பற்றி காவலன்
    மலிதரு பார்மிசை மன்னுவோன் எனவே.